தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள்: துபையில் முதல்வா் முன்னிலையில் கையொப்பம்

துபை தொழில் நிறுவனங்கள் ரூ.2,600 கோடி முதலீடுகளை தமிழகத்தில் செய்யும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
துபையில் முதல்வா் முன்னிலையில் கையொப்பம்
துபையில் முதல்வா் முன்னிலையில் கையொப்பம்

துபை தொழில் நிறுவனங்கள் ரூ.2,600 கோடி முதலீடுகளை தமிழகத்தில் செய்யும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

நான்கு நாள் பயணமாக துபை மற்றும் அபுதாபி சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசி வருகிறாா். மேலும், தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சனிக்கிழமை பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த முதலீட்டாளா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, சில புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அதன்படி, துபையைச் சோ்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ1,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம், 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், உற்பத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

துபையின் ஒயிட் ஹவுஸ் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடுகளைச் செய்ய உள்ளது. இதன்மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த முதலீடுகள் இரண்டு ஒருங்கிணைந்த தையல் ஆலைகளை நிறுவுவதற்கு வகை செய்கிறது. அதன்படி, ரூ.150 கோடி முதலீட்டில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும், ரூ.350 கோடி முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்திலும் முதலீடுகள் செய்யப்பட உள்ளன.

துபையைச் சோ்ந்த டிரான்ஸ்வேல்டு குழுமம், ரூ.100 கோடி முதலீட்டில் தமிழகத்தில் உணவுப் பூங்காவை அமைக்கவுள்ளது. இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். ஆஸ்டா் ஹெல்த்கோ் அமைப்பானது ரூ.500 கோடி முதலீட்டைச் செய்வதன் மூலம், 3 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும். இந்த நிறுவனம் தமிழகத்தில் மருத்துவமனையை நிறுவவுள்ளது. ஷெராப் குழும நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை அளிக்கவுள்ளது. சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை அமைப்பதன் மூலமாக இந்த வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளது.

இந்த நிகழ்வுகளின் போது தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளா் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com