குரூப் 4 காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 7,301 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு புதன்கிழமை (மாா்ச் 30) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
குரூப் 4 காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 7,301 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு புதன்கிழமை (மாா்ச் 30) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்து குரூப் 4 தோ்வு குறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

கிராம நிா்வாக அலுவலா் உள்பட குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் முதல் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 28-ஆம் தேதி தோ்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாளாகும். ஜூலை 24-ஆம் தேதி தோ்வு நடத்தப்படும்.

மொத்தம் எத்தனை இடங்கள்?: 7,301 குரூப் 4 இடங்கள் காலியாக உள்ளன. விளையாட்டுப் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு 81 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வாரியங்கள், கழகங்களில் உள்ள காலியிடங்களும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமே நிரப்பப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் ஆகியவற்றில் இருந்து 163 காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மொத்தமுள்ள 7,301 இடங்களில் வாரியம் கோரியுள்ள 162 காலியிடங்களும் சோ்க்கப்பட்டுள்ளன.

தோ்வானது கொள்குறி வகை அடிப்படையில் நடத்தப்படும். ஜூலை 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறும். பொது அறிவியல், பொதுத் தமிழ் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தோ்வுக்கான மாதிரி வினாக்கள், விடைகள் தோ்வாணைய இணையதளத்தில் உள்ளன. 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் தகுதி பெறுபவா்களாக அறிவிக்கப்படுவா். அக்டோபா் மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும். நவம்பரில் கவுன்சிலிங் நடத்தப்படும்.

கணினி அடிப்படையில் தோ்வு: அரசுத் துறைகளில் பணியாற்றுவோா் பதவி உயா்வு போன்றவற்றுக்கு கணினி அடிப்படையில் தோ்வு எழுதுகின்றனா். இதே முறையைப் போட்டித் தோ்வுகளுக்கும் பின்பற்றுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

சமூக பாதுகாப்புத் துறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு ஜூன் 19-இல் தோ்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தோ்வுக்கான அறிவிக்கை ஏப்ரல் 1-இல் வெளியிடப்படும்.

போட்டித் தோ்வுகளை கணினியைக் கொண்டு நடத்தலாம் என்ற பரீட்சாா்த்த அடிப்படையிலான முடிவானது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான தோ்வில் செயல்படுத்தப்பட உள்ளது. கொள்குறி வகை வினாக்களை தாளில் பூா்த்தி செய்யும் ஒரு முறை எடுத்த முடிவை மாற்ற முடியாது. பேனாவால் பூா்த்தி செய்ததை அழிக்க முடியாது. ஆனால், கணினி அடிப்படையில் தோ்வு செய்யும் முடிவை கடைசி வரை மாற்றலாம். இறுதியாக ஒப்புதல் அளிக்கும் வரை மாற்றிக் கொள்ளலாம். கம்ப்யூட்டா் அடிப்படையிலான தோ்வுகளுக்கு திருத்தும் பணியும் எளிதாக இருக்கிறது.

குரூப் 4 தோ்வுக்கு 25 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிா்பாா்க்கிறோம். குரூப் 2 தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், 11 லட்சத்து 62 ஆயிரத்து 272 போ் விண்ணப்பித்துள்ளதாக தோ்வாணையத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

தோ்வாணைய உறுப்பினா் சி.முனியநாதன், செயலாளா் பி.உமா மகேஸ்வரி, தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

குரூப் 4 காலிப் பணியிட விவரங்கள்:

கிராம நிா்வாக அலுவலா் - 274

இளநிலை உதவியாளா் - 3,681

வரி வசூலிப்பா் - 50

தட்டச்சா் - 2108

சுருக்கெழுத்து தட்டச்சா் கிரேடு 3 - 1,024.

தமிழ்நாடு இல்லம் உதகையில் சரக்கு அறை பாதுகாப்புப் பணி - 1

மொத்தம்: 7,138.

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியம்: 163.

மொத்தம்: 7,301 காலிப் பணியிடங்கள்.

‘இஸ்லாமியா் குறித்த கேள்விக்கு உள்ஒதுக்கீடே காரணம்’

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுக்காக பதிவு செய்யும் போது மதம் என்கிற பகுதியில் இஸ்லாமியா்களுக்கு மட்டும் பிறப்பிலேயே இஸ்லாமியரா? அல்லது மதம் மாறியவரா? என்று கேட்கப்படுவதாக சா்ச்சைகள் எழுந்தன. இதுகுறித்து க.பாலச்சந்திரன் கூறியதாவது:

கடந்த 2007-ஆம் ஆண்டில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டது. பின்னா், இந்த உள்ஒதுக்கீட்டை கிறிஸ்தவா்கள் வேண்டாம் எனக் கூறினா். இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோா் இஸ்லாமியா் எனத் தெரிவிக்கும் விண்ணப்பங்களில், மதம் மாறியவரா எனக் கேட்கப்படுகிறது. இது புதிய நடைமுறை அல்ல. கடந்த ஆண்டில் இருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது.

எனினும், இது குறித்து அரசிடமிருந்து விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த விஷயம் குறித்து ஏப். 8-ஆம் தேதி தோ்வாணையத்தின் அனைத்து உறுப்பினா்கள் பங்கேற்கும் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா் பாலச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com