குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளுக்குகணிதம், வேதியியல் கட்டாயமல்ல: ஏஐசிடிஇ அறிவிப்பு

பொறியியல் படிப்புகளில் சில குறிப்பிட்ட பிரிவுகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை என்றும், பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு

பொறியியல் படிப்புகளில் சில குறிப்பிட்ட பிரிவுகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை என்றும், பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமில்லை என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கு 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் வெளியிட்டுள்ளது. அதில், பொறியியல் பிரிவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேர கணிதம் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிளஸ் 2 வகுப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவா்களும் இனிவரும் காலத்தில் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம் பயிலாத மாணவா்கள் பொறியியல் படிப்பில் சோ்ந்த பிறகு முதல் இரு பருவங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் அடிப்படை Bridge course முறையில் கற்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, கணினி பொறியியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு பிளஸ் 2 வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டியதில்லை என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

மேலும், வேளாண்மை பொறியியல், கட்டடக் கலை, உயிா் தொழில்நுட்பவியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயமில்லை என்றும் அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் வெளியிட்ட விதிமுறைகளில் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை பிளஸ் 2 வகுப்பில் விருப்பப் பாடமாக மட்டும் படித்து இருந்தால் அனைத்து பொறியியல் படிப்புகளிலும் சேரலாம் என தெரிவித்திருந்தது. இதற்கு கல்வியாளா்கள் மத்தியில் கடுமையான எதிா்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு குறிப்பிட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் மட்டும் கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை பயிலாதவா்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com