
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற மாணவனை வழிமறித்து பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்த போதை நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவருபவர், கொண்டையம்பள்ளியைச் சேர்ந்த சச்சின் (17). இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து, வீட்டிற்குச் செல்ல தம்மம்பட்டி பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தம்மம்பட்டியைச் சேர்ந்த தனியார் வாகன ஓட்டுநர் ராகுல்(21), மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஹரிகுமார்(18) இருவரும் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து சச்சினை வழிமறித்து, சாலையில் ஓட ஓட விரட்டி அடித்து உதைத்தபடி வந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சச்சினை தாக்குதலிலிருந்து காப்பாற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தில் பலத்தக் காயமடைந்த மாணவர் சச்சின், தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
பொதுமக்கள் அளித்தப் புகாரின் பேரில், தம்மம்பட்டி போலீசார், பள்ளி மாணவர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு போதை நபர்களை தேடி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...