தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய மே நாள் வாழ்த்துரை, ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினமாக இருக்கும் மே நாளில் கருணாநிதியால் உருவாக்கித் தரப்பட்டிருக்கும் மே தின நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செய்யும் வகையில் மலரஞ்சலி செலுத்தி – இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளைத் சொல்லும் ஒரு வாய்ப்பை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன்.

சிறப்பான இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை நிர்வாகிகள் அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை -  வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல - தொழிலாளர்களை வாழவைக்கும் அரசாகவும் இன்றைக்கு தி.மு.க. அரசு இருந்து கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளி பெருமக்களுக்காக நடைபெறும் ஆட்சிதான்!

திராவிட முன்னேற்றக் கழகம் முதல்முறையாக அண்ணா தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்ற நேரத்தில் நம்முடைய கருணாநதி தன்னுடைய 'முரசொலி' இதழில் ஒரு கவிதையை வடித்துத் தந்தார்கள்.

''ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில்!

இனி ஏழைக்கு வாழ்வு வந்தது" - என்று பெருமையோடு எழுதிக்காட்டினார்கள்!

அண்ணா தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும் சரி – அதைத் தொடர்ந்து கருணாநிதி பொறுப்பேற்று நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி, ஏழைகள் - தொழிலாளர் தோழர்கள் மனமகிழ்ச்சியோடு சிரிக்கும் ஆட்சியாகத்தான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது.

ஏழைகளுக்காக, தொழிலாளர் தோழர்களுக்காக, பாட்டாளிப் பெருமக்களுக்காக, வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களுக்காக, அண்ணா தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து கருணாநிதி நடத்திய ஆட்சியாக இருந்தாலும் எவ்வளவோ திட்டங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

1930-ஆம் ஆண்டிலேயே மே தினத்தைக் கொண்டாடியவர் தந்தை பெரியார்.

அதற்குப்பிறகு சோவியத் யூனியனுக்குப் பயணம் போய் வந்து லெனின், மாஸ்கோ, ரஷ்யா என்று தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியவர் பெரியார்.

அந்த வழியில்தான் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார் கருணாநிதி.

எனது தலைமையிலான நமது அரசு, இது தோழர்களின் அரசாகத்தான் இருக்கும் – தொழிலாளர்களின் அரசாகத்தான் இருக்கும் – தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் அரசாகத்தான் இருக்கும் என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்த மே தினப் பூங்காவில் தொழிலாளர்களின் சின்னமாக இருக்கும் இந்த மே தின நினைவுத் சின்னத்தை இங்கு அமைந்திருக்கிறோம் என்றால், இதனை அமைத்துத் தந்தவரும் கருணாநிதிதான் என்பது உங்களுக்கு தெரியும்.

சட்டமன்றத்தில் அன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரதராஜன், முதல்வராக இருந்த கருணாநிதியிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.

மே தினத்தையொட்டி, அந்த மே தினப் பூங்காவில் ஒரு நினைவுச்சின்னம் வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை வைத்த உடனே, அதை ஏற்றுக்கொண்டவர் நம்முடைய கருணாநதி. அவ்வாறு ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, மறுநாளே இந்த இடத்திற்கு வந்து, சுற்றிப்பார்த்து, பார்வையிட்டு எந்த இடத்தில் வைக்கலாம் என்று அதிகாரிகளுடன் கலந்து பேசி, ஆய்வு செய்து உடனடியாக அந்த இடத்தில் வைத்தார்.

அந்தக் கட்டுமானப் பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, ஏறக்குறைய ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வருவார். பத்து – பன்னிரண்டு முறை வந்து நேரடியாக பார்த்தார்.

எனவே இது அவரால் கட்டப்பட்டது மட்டுமல்ல, எப்படி இருக்க வேண்டும்? எந்த நிலையில் இருக்க வேண்டும்? எந்த அமைப்பு இருக்க வேண்டும்? என்று அதையும் பார்வையிட்டு, அதற்குப்பிறகு இதைக் கட்டித் தொழிலாளர்களுக்குரிய மரியாதையை இன்றைக்கு அவர் வழங்கி இருக்கிறார். எனவே அவர் வழிநின்று இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் – இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் நானும் அவர் வழிநின்று தொழிலாளர்களைப் போற்றுவோம்! தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்! என்று சொல்லி இங்கு வந்திருக்கும் தொழிலாளர் தோழர்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய மே தின வாழ்த்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com