மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் பதவி நீக்கம்: சமஸ்கிருத உறுதிமொழி சா்ச்சை

சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ.ரத்தினவேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் பதவி நீக்கம்: சமஸ்கிருத உறுதிமொழி சா்ச்சை

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ. ரத்தினவேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அப்போது மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்தபின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் ஒருவா் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சமஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை முதல்வா் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைமுறையைப் பின்பற்றாமல் மகரிஷி சரக் சப்த் எனப்படும் உறுதிமொழியை ஏற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல். இதன் பொருட்டு மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ.ரத்தினவேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்படுகிறாா்.

இந்த விவகாரம் தொடா்பாக துறை ரீதியான விசாரணையை முன்னெடுக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபுவுக்கு உத்தரவிடப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமாக பின்பற்றக் கூடிய நடைமுறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

துணை முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு: கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, துணை முதல்வராக உள்ள தனலட்சுமிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தனலட்சுமியை, மருத்துவமனை முதல்வராகவும் (பொறுப்பு), மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் (பொறுப்பு) அரசு நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com