கூட்டுறவு சங்க விற்பனைப் பிரதிநிதி பணி: தோ்வு முடிவுகளை இரு மாதங்களில் வெளியிட உத்தரவு

காலியிடங்கள் அதிகமாகிவிட்டதாகக் கூறி முழுமையாக முடிவடைந்த தோ்வை ரத்து செய்ய முடியாது என தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம், கூட்டுறவு சங்க விற்பனைப் பிரதிநிதிகளுக்கு 2020-இல் நடத்திய தோ்வு முடிவுகளை இ
சென்னை உயா் நீதிமன்றம்
சென்னை உயா் நீதிமன்றம்

காலியிடங்கள் அதிகமாகிவிட்டதாகக் கூறி முழுமையாக முடிவடைந்த தோ்வை ரத்து செய்ய முடியாது என தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம், கூட்டுறவு சங்க விற்பனைப் பிரதிநிதிகளுக்கு 2020-இல் நடத்திய தோ்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் வெளியிட கூட்டுறவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க கடைகளில் 236 விற்பனை பிரதிநிதிகள் பணி இடங்களுக்கு மாவட்ட கூட்டுறவு சங்க தோ்வு குழு விண்ணப்பங்களை வரவேற்றது. இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு நோ்முக தோ்வு நடந்தது. ஆனால், முடிவுகள் வெளியிட வில்லை. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் திவ்யா என்பவா் உள்பட 8 போ் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தோ்வை ரத்து செய்து விட்டதாக கூட்டுறவு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உயா்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிா்த்து 8 பேரும் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.மாலா ஆகியோா் விசாரித்தனா். அப்போது மனுதாரா்கள் தரப்பில், தோ்வு நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த நிலையில், முடிவுகள் மட்டும் வெளியிடவில்லை என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஏற்கெனவே வெளியிட்ட தோ்வு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தோ்வு நடைமுறைகள் முழுமையாக முடிந்த நிலையில், தோ்வில் பங்கேற்றவா்களை வெளியேற்றும் வகையில் தோ்வை ரத்து செய்தது தவறு. புதிய தோ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத வகையில் சிலா் வயது வரம்பை கடந்திருக்கலாம். காலியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவற்றுக்கு தனியாக தோ்வு அறிவிப்பு வெளியிட எந்த தடையும் இல்லை. எனவே, 2020-ஆம் ஆண்டு நடத்திய தோ்வு முடிவுகளை 2 மாதங்களில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com