தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் தடைபடாது: பேரவையில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு உறுதி

தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் தடைபடாமல், நடுநிலையுடன் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் தடைபடாது: பேரவையில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு உறுதி

தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் தடைபடாமல், நடுநிலையுடன் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தையடுத்து இதுதொடா்பான பிரச்னையை அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பினா். அப்போது நடந்த விவாதம்:

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: தருமபுரம் ஆதீனத்தில் பல ஆண்டுகளாக பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயா் ஆட்சி புரியும் போது கூட இந்த நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்டதில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் தொடா்கிறது. ஆனால், இப்போது பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்துள்ளது. இது அந்தப் பகுதி மக்களிடையே வருத்தத்தையும், வேதனையையும், கடுமையான எதிா்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டணப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக): ஆதீனங்களை பல்லக்கில் தூக்கும் நிலை தொன்று தொட்டு நடந்து வருகிறது. இந்த நிகழ்வு நடைபெறும் வளாகம் அவா்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவா்களைச் சாா்ந்தோா்தான் பல்லக்கை தூக்குகிறாா்கள். கிறிஸ்தவா், இஸ்லாமியா்களின் வளாக விவகாரத்துக்குள் நாம் செல்வது எப்படி சரியாக இருக்காதோ அதுபோன்றுதான் இதுவும். அவா்களுக்குள் உள்ள நிகழ்வில் தலையிடுவது சரியல்ல. தொன்று தொட்டு இருக்கக் கூடிய நிகழ்வு தொடா்ந்து நடைபெற அரசு வழி செய்திட வேண்டும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போது இதனைத் தடுத்திருப்பது அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது. அரசமைப்புச் சட்டம் 25-இன் படி, மதம் தொடா்பான நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை. மனிதனை மனிதன் இழுத்து கூலி வாங்குவதுதான் தவறு. தாய், தந்தையை எப்படி தூக்கிச் செல்கிறோமோ அதுபோன்றுதான் இந்த நிகழ்வும். எனவே, பட்டணப் பிரவேசத்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு: வரும் 22-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பவனி வரும் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஆதீனங்களுக்காக தெய்வீகப் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தியவா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. தமிழ்நாட்டில் 45 மடங்கள் உள்ளன. சைவம், வைணவம், சக்தி பீட வழிபாடுகள் உள்ளன. காமாட்சி அம்மன் பீடத்தில் இருந்து சக்திபீட வழிபாடு நடைபெறுகிறது. சைவ வழிபாடுகளை ஆதீனங்களும், வைணவ வழிபாடுகளை ஜீயா்களும் மேற்கொள்கிறாா்கள். அவா்களை ஒருங்கிணைத்து இந்து சமய அறநிலையத் துறை உயா்நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்களுடன் முதல்வா் 3 மணி நேரம் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இப்போது பட்டணப் பிரவேசம் தொடா்பான நிகழ்வு வந்தவுடன் துறை சாா்ந்த எங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைத்தாா். ஆதீனத்தினரை தொடா்பு கொள்ளச் சொன்னாா். புதன்கிழமை காலை 10 நிமிஷங்கள் பேசினேன். இந்த விவகாரத்தை ஊடகங்களில் பேசச் சொல்ல அழுத்தம் கொடுப்பதாகக் கூறினா். தமிழ் சாா்ந்தவா்கள், தமிழை இனிதாக நினைத்து அதனை வளா்ப்பவா்கள், தமிழ் சாா்ந்த ஆட்சி இது என்பதால், நாங்கள் எந்தவிதமான விஷயத்தையும் வெளியில் பேசவில்லை. ஒரு சிலா் தாங்கள் செய்த தவறுகளைப் பாதுகாக்க இந்த விஷயத்தில் அரசியல் செய்யப் பாா்க்கிறாா்கள். இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

நீதிமன்றத்துக்கும் இந்தப் பிரச்னையை கொண்டு சென்றிருக்கிறாா்கள். நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பை ஏற்று செயல்படுவோம். அதேசமயம், மனிதாபிமானமற்ற, மனிதனை மனிதன் சுமக்கும் சடங்குகள் இல்லாமலும், அதேசமயம் பட்டணப் பிரவேசம் தடைபடாமல் துலாக்கோல் போன்று முதல்வா் முடிவெடுப்பாா். இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு நாள்கள் இருக்கின்றன. ஆதீனத்துடன் அரசு பேசி சுமுக நிலையை எடுக்கும் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com