பாதுகாப்பு வசதி இல்லாமல் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளை மூட நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாமை, ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாமை, ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


சேலம்: போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சேலத்தில் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாமை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை விரைவுப்படுத்தும் வகையில் 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் 1.50 கோடி பேர் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் 50 லட்சம் பேர் உள்ளனர். 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 1 லட்சம் இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது. நாட்டிலேயே 1 லட்சம் இடங்களில் முகாம் நடைபெறுவது தமிழகத்தில் தான்.

தமிழகத்தில் 18 வயதை தாண்டியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 92.89 சதவீதமாக உள்ளது. 2 ஆவது தவணை செலுத்தியவர்களின் எண்ணிக்கை 79.39 சதவீதமாக உள்ளது. மீதமுள்ள மக்களை கண்டறிந்து, தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது. மலைப்பகுதியில் பிரேத பரிசோதனை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாகப் புகார் வந்தது. மேலும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ரூ.1.05 கோடி மதிப்பில் பிரேத பரிசோதனை அமைக்கவும், உபகரணங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி ஒரு மாத காலத்தில் தொடங்கப்படும்.

சேலம் அரசு மருத்துவமனையில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகம் ரூ.1 கோடியில் அமைகிறது. மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் ஆய்வகம் அமைகிறது. அம்மாபேட்டை நகர மருத்துவமனைக்கு  ரூ.1.46 கோடி மதிப்பில் நவீன உபகரணம் வழங்க திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பில் கேத் லேப் அமைக்க நடவடிக்கை அமைக்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 56,000 விபத்துகளில் சிக்கியவர்களின் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி மருத்துவமனையில் நெடுஞ்சாலை விபத்துக்களில் சிக்குபவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க ரூ.50 லட்சம் மதிப்பில் விபத்து சிகிச்சை பிரிவை மேம்படுத்தப்பட உள்ளது. சேலத்தில் 7 வட்டங்களில் ரு.5.6 கோடி வட்ட சுகாதார பிரிவு மையம் கட்டப்பட உள்ளது.

சேலத்தில் 38 நகர்ப்புற மருத்துவமனைகள்:
தமிழகத்தில் ரூ.180.45 கோடியில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சேலத்தில் 32 புதிய நகர்ப்புற மருத்துவமனைகள், நகராட்சிகளில் 6 மருத்துவமனைகள் வர உள்ளன. மிக விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கி முடிக்கப்படும். சந்தை, குடிசை பகுதிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் இந்த மருத்துவமனைகள் அமையும்.

ஷவர்மா என்பது மேலைநாட்டு உணவாகும். நாள்பட்ட இறைச்சி, சரியான உணவுப்பதப்படுத்துதல் இல்லை என்றால் அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கும். போதிய பதப்படுத்துதல் இல்லாமல் ஷவர்மா விற்பனை தொடங்கி உள்ளது. வியாபாரத்தை மட்டுமே நோக்கப்படுத்தி ஷவர்மா விற்பனை செய்யப்படுகிறது. ஷவர்மா ஆய்வு நடைபெற்று வருகிறது. குளிர்சாதன வசதி உள்ளதா என்பது ஆயிரம் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. ஷவர்மா ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ஷவர்மா பாதுகாப்பு வசதி இல்லாத கடைகளை  மூட உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

ஆய்வின்போது ஆட்சியர் செ.கார்மேகம், வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன், மேயர் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com