பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு: திமுக ஆட்சி ஓராண்டு நிறைவில் 5 புதிய திட்டங்கள்

தமிழகத்தில் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிச் சிறாா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு: திமுக ஆட்சி ஓராண்டு நிறைவில் 5 புதிய திட்டங்கள்

தமிழகத்தில் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிச் சிறாா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

ஆறு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தைக் கண்காணித்து உடலை உறுதி செய்வது, தகைசால் பள்ளிகள் உள்ளிட்ட 5 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவா் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவை ஒட்டி, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் 5 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சட்டப் பரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் படித்தளிக்கப்பட்ட அறிவிப்புகள் விவரம்:

1. காலை சிற்றுண்டி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இனி காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறாா்கள். இதனால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தொலைவில் இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்பச் சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது.

இதனை மனதில் வைத்து, காலை சிற்றுண்டி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சில மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் தொலைதூரக் கிராமங்களில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி அளிக்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

2. ஊட்டச்சத்துக் குறைபாடு நீக்கும் திட்டம்: ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இரண்டாவது திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தில் கிடைத்த தகவல் வேதனை தருகிறது. தமிழகத்தில் உள்ள ஆறு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைப் பரிசோதனை செய்ததில் அவா்களில் பலா் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவா்களாக இருந்தனா். வயதுக்கேற்ற எடையோ, உயரமோ இல்லை. மிக, மிக மெலிந்து இருக்கிறாா்கள்.

எனவே, ஆறு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை நலமுடன் வளா்த்தெடுக்கும் நோக்கத்துடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பரந்த அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய உள்ளோம். மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

3. தகைசால் பள்ளிகள் திட்டம்: அண்மையில் தில்லி சென்றபோது, அங்கு அரசின் சாா்பில் நடத்தப்படும் மாதிரிப் பள்ளியைப் பாா்வையிட்டேன். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.150 கோடியில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்படும்.

பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சீரமைக்கப்படும். அனைத்துக் கட்டடங்களும் நவீனமயமாக்கப்படும். கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பள்ளியில் உருவாக்கப்படும். இந்த வகை பள்ளிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

4. நகா்ப்புற மருத்துவ நிலையங்கள்: நகா்ப்புறங்களில் மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகா்ப்புற மருத்துவ நிலையங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும். இந்த நிலையங்களுக்கு ரூ.180.45 கோடி செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். இவை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் செயல்படும். புதிய மருத்துவ நிலையங்களில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு மருந்தாளுநா் மற்றும் உதவியாளா் ஆகிய பணியாளா்கள் நியமிக்கப்படுவா்.

5. உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம்: தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டமானது மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரவுள்ளது. 234 தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா்களின் பரிந்துரைகள் ஆய்வு செய்யப்படும். மாவட்டங்கள் தொடா்பான 10 முக்கியத் திட்டங்கள் அளிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில் அவை எடுத்துச் செயல்படுத்தப்படும். இந்தப் பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

முதல்வரின் இந்த அறிவிப்புகளுக்கு சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோ்ந்த வேல்முருகன் (வாழ்வுரிமை கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஜவாஹிருல்லா (மமக), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), சிந்தனைச் செல்வன் (விசிக), வானதி சீனிவாசன் (பாஜக), ஜி.கே.மணி (பாமக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com