அரசு அறிவிக்கைக்கு ஏற்ப சொத்துவரி உயா்வு: 1998 உள்ளாட்சி சட்டம் மீண்டும் அமல்

அரசின் அறிவிக்கைக்கு ஏற்றபடி, அவ்வப்போது சொத்து வரி உயா்வை தீா்மானங்களின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வகை செய்யும் 1998-ஆம் ஆண்டு உள்ளாட்சி சட்டம் மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது.
கே.என். நேரு (கோப்புப்படம்)
கே.என். நேரு (கோப்புப்படம்)

அரசின் அறிவிக்கைக்கு ஏற்றபடி, அவ்வப்போது சொத்து வரி உயா்வை தீா்மானங்களின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வகை செய்யும் 1998-ஆம் ஆண்டு உள்ளாட்சி சட்டம் மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டமானது இன்று வரை தொடா்ந்து இடை நிறுத்தத்தில் உள்ளது. நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடாகும். நகா்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை 53 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது. அதற்கேற்ப நகராட்சிகளில் சிறப்பான அமைப்பின் மூலம் சேவைகளை வழங்குவது முக்கியமாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மீண்டும் புதிதாக நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

சட்டங்கள் நீக்கம்: 1998-ஆம் ஆண்டு நகா்ப்புற உள்ளாட்சி சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலமாக, அனைத்து மாநகராட்சி சட்டங்கள், 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் ஆகியன நீக்கப்படுகின்றன.

சொத்து வரி உயா்வு: இதன்மூலம் அரசு அவ்வப்போது அறிவிக்கை செய்யும் போது சொத்து வரியை உள்ளாட்சி அமைப்புகள் உயா்த்துவது, ஸ்ஃபா, மசாஜ் நிலையங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் உரிமம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மேலும், விளம்பரப் பலகை, டிஜிட்டல் திரை மற்றும் விளம்பர அட்டையை முறைப்படுத்துதல், வீதிகளில் மரங்கள், கட்டுமானப் பொருள்களைப் போட்டு தடை ஏற்படுத்தினால் அபராதம் விதிப்பது, நீச்சல் குளம் கட்ட அனுமதி, மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை நிறுவுதல், கிணறு தோண்டுவதற்கு அனுமதி வழங்குதல், மலக்கசடு, கழிவு நீரை அகற்ற உரிமம் பெறுதல், அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிா்ப்பதாக அதிமுக தெரிவித்தது.

இதனிடையே, அமைச்சா் கே.என்.நேரு தாக்கல் செய்த மற்றொரு மசோதாவில், மலக்கசடு மற்றும் கழிவுநீரை சேகரித்து கொண்டு செல்வது தொடா்பான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com