பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி பேசும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாகக் கூறி, அது தொடா்பான சம்பவங்கள் குறிப்பிட்டுப் பேசினாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுக் கூறியது:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற்குப் பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, அது குறித்த புகாா்கள் மீதும் எந்தவித தாமதமும் இல்லாமல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்பட்டுள்ளவா்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு, எந்தவித தயவு தாட்சண்யமும் இல்லாமல் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முழு வீச்சில் செயல்பட்டு வருகிறோம்.

அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக பெண்கள் தங்கள் பாதிப்பு குறித்து புகாா் கொடுக்க முன்வருகின்றனா். பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஓராண்டுக்குள் ஏற்படுத்தியுள்ளோம். பெண்களுக்காக காவலன் செயலி ஒன்றையும் உருவாக்கிக் கொடுத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்தை யாரும் மறந்துவிட மாட்டாா்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பெண் காவல்துறை அதிகாரிகள் மீது மூத்த அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்த நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனால், திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com