கேரளத்துக்கு கட்டுப்பாடின்றி செல்லும் கனிம வளங்கள்!

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கட்டுப்பாடின்றி கொண்டு செல்லப்படுவது பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்துக்கு கட்டுப்பாடின்றி செல்லும் கனிம வளங்கள்!

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கட்டுப்பாடின்றி கொண்டு செல்லப்படுவது பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 இதை முறைப்படுத்த அல்லது முழுமையாகத் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.
 தென்காசி மாவட்டத்தில் 30 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளிலிருந்து ஜல்லி கற்கள், குண்டு கற்கள், சிறிய அளவிலான பாறைகள் நாள்தோறும் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த கனிம வளங்களும், இங்கு உற்பத்தி செய்யப்படும் செயற்கை மணலும் (எம்-சான்ட்) பெரும்பாலும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

 கேரளத்தில் 450 கி.மீ. தொலைவுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை நீள்கிறது. மலைகளால் சூழப்பட்ட கேரளத்தில் கற்கள், செயற்கை மணலுக்கான மூலப்பொருள்கள் அதிகளவில் இருந்தும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மலைகளை உடைத்து எடுக்கவோ, கனிம வளங்களை எடுக்கவோ கேரள அரசு அனுமதிப்பதில்லை.
 ஆனால், தமிழகத்திலிருந்து குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் கல்குவாரிகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஜல்லிகள், பாறைகள், எம்-சான்ட் உள்ளிட்டவை பெரும்பாலும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
 மொத்தமாகக் கொள்முதல் செய்யப்படுவதாலும், அதிக விலைக்கு வாங்கிச் செல்வதாலும் குவாரி உரிமையாளர்கள் கேரளத்துக்கு விற்பனை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
 விலை ஏற்றம்-தட்டுப்பாடு: இதனால் தமிழகத்தில் கட்டுமானப் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், மூன்று மடங்கு வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய அளவுக்கு பாரங்கள் ஏற்றும் 14, 18, 22சக்கர கனரக வாகனங்கள் கிராம, ஊராட்சி ஒன்றிய சாலைகளில் இயக்கப்படுவதால் சாலைகள், சாலைகளில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாய்கள் உடைந்து சேதமடைவதோடு பொதுமக்களும் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
 சுற்றுச்சூழல் பாதிப்பு: கல்குவாரி மற்றும் செயற்கை மணல் நிறுவனங்களில் அரசு நிர்ணயித்த அளவைவிட அளவுக்கு அதிகமாக எடுப்பதால் விவசாயக் கிணறுகளில் நீர்வற்றி விவசாயம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
 கனரக வாகனங்கள் பிரதான சாலையில் சென்றாலும்கூட, தெருவுக்குள் அதிர்வுகள் ஏற்படுவதாகவும், இரவில் தூங்க முடிவதில்லை எனவும், சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு தலா ரூ. 200 நுழைவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் காசிமேஜர்புரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 போக்குவரத்து நெரிசல்: கடந்த காலங்களில் ஆற்று மணல் கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால் தற்போது தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு மணல் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடையம், மத்தளம்பாறை, குற்றாலம், செங்கோட்டை, புளியரை வழியாக கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
 சில வேளைகளில் லாரிகள் மத்தளம்பாறையிலிருந்து தென்காசி நகரம் வழியாகவும் செல்கின்றன. இதனால் கடையம், தென்காசி, செங்கோட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
 லாரிகளுக்கு வழக்கு, அபராதம்: இதுதொடர்பாக தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறியது: கடந்த ஏப். 1-ஆம் தேதிமுதல் மே 5-ஆம் தேதி வரை நடைபெற்ற வாகன சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வாகனங்களில் கனிமவளங்களைக் கொண்டு சென்றது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 இவற்றில் தமிழக பதிவெண் கொண்ட 6 வாகனங்களுக்கு ரூ. 4.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிற மாநில பதிவெண் கொண்ட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4.57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்திய பிறகு வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
 புளியரையில் வருவாய்த் துறையால் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வருவாய்த் துறையினருடன் இணைந்து மோட்டார் வாகன அலுவலர்களும் சோதனையிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.
 விதிமீறல் புகார் இல்லை: திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கனிம வள உதவி இயக்குநர் வினோத் கூறுகையில், ஆற்று மணலைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர குண்டு கற்கள், ஜல்லி உள்ளிட்டவை கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்படவில்லை.
 நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வாகனங்களில் அதிகளவில் கொண்டு சென்றால் மோட்டார் வாகன அதிகாரிகள் அதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குவாரிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாறைகள் தோண்டி எடுக்கப்படுவதாக எந்தவிதமான புகாரும் இல்லை என்றார்.
 தடை செய்ய வலியுறுத்தல்
 கேரளத்துக்கு கொண்டு செல்வதற்காக அதிக திறன்கொண்ட வெடிபொருள்கள் மூலம் அதிக ஆழத்தில் பாறைகள் உடைக்கப்படுவதால் பூமியின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
 அம்பாசமுத்திரம், தென்காசி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி அருணன் கூறியது: கேரளத்துக்குச் செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் அரசு சார்பில் 150 டன் திறன் கொண்ட எடை மேடை அமைத்து கண்காணிக்க வேண்டும். கிராம, ஊராட்சி ஒன்றிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதற்கான தடையைத் தீவிரமாக அமல்படுத்த உத்தரவிடவேண்டும் என்றார் அவர்.
 பாமக மாநில துணைத் தலைவர் மு.அய்யம்பெருமாள் கூறியதாவது: கேரளத்துக்கு கட்டுப்பாடின்றி கனிம வளம் கொண்டு செல்லப்படுவது நீடித்தால் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் வரும் காலங்களில் குன்றுகள் இல்லாமல் போகும். இதனால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு விவசாயமும் கட்டடத் தொழிலும் பாதிக்கப்படும் என்றார் அவர்.
 ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக் குழு உறுப்பினர் இராம.உதயசூரியன் கூறுகையில், கேரளத்துக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை இயக்கமாக மாற்றி போராடத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
 செங்கோட்டையில் வசித்து வரும் கடையநல்லூர் பேரவைத் தொகுதி உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி கூறியதாவது: தமிழகத்திலிருந்து கல், ஜல்லி, எம்-சான்ட் போன்ற கட்டுமானப் பொருள்கள் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுவதால் தமிழகத்தில் அவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com