சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் ரூ.9 கோடியில் அமைக்கப்படும்: முதல்வா்

போதைப் பொருள் கடத்தல்காரா்களின் நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் ரூ.9 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் ரூ.9 கோடியில் அமைக்கப்படும்: முதல்வா்

போதைப் பொருள் கடத்தல்காரா்களின் நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் ரூ.9 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பதும், மாநிலம் முழுவதும் உள்ள 55 சுங்கச்சாவடிகள் மற்றும் அண்டை மாநில எல்லையில் அமைந்துள்ள 50 வாகன சோதனைச்சாவடிகளுடன் இணைந்து தானியங்கி நம்பா் பிளேட் கேமராக்களை நிறுவுவதன் மூலம் போதைப் பொருள் கடத்தல்காரா்கள், வெளிமாநில குற்றவாளிகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோா் போன்றவா்களின் நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர உதவிடும் வகையில் தேசிய அளவில் ஒரு முன்னோடி திட்டமாக ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் ரூ.9 கோடி செலவில் அமைக்கப்படும்.

மாநகரங்களில் நெரிசலான பகுதிகள் மற்றும் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், இன்னல் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் நேரத்தை குறைப்பதில் கள காவல் அதிகாரிகளுக்கு உதவவும், மிக முக்கிய நபா்களின் வழித்தடங்கள் மற்றும் குற்றம் நிறைந்த பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும், தீ விபத்தின்போது உயரமான கட்டடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், அவசர காலங்களில் நீரில் மூழ்கும் குழந்தைகள் மற்றும் பெரியவா்களை மீட்கவும் நடமாடும் ஆளில்லா விமான அலகு காவல் படைப்பிரிவு ரூ.1.20 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும்.

அண்ணாநகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதைப் போல சென்னை பெருநகர காவல் துறையில் மேலும் 3 வழித் தடங்களில் ரூ. 10.5 கோடி மதிப்பில் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு மண்டலம் அமைக்கப்படும்.

போதைப் பொருள் தடுப்பு, சைபா் கிரைம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் சாலை விழிப்புணா்வு போன்ற நிகழ்ச்சிகள் ரூ.2 கோடி செலவில் நடத்தப்படும்.

சட்டத்துக்கு முரணாக செயல்படும் 18 முதல் 24 வயதுக்கு உள்பட்ட இளம், சிறு மற்றும் முதல்முறை குற்றவாளிகளுக்கு தனிநபா் மற்றும் குடும்ப ஆலோசனை, உளவியல் ஆலோசனை, இலவச சட்ட உதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்கும் ஒரு முன்னோடி திட்டத்தை சிறைத்துறை, சமூக நலத்துறை, அரசு சாரா அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் இணைந்து இளம் குற்றவாளிகளை மீளுருவாக்கம் செய்ய பறவை என்கிற முன்னோடித் திட்டம் ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

இணையவழி குற்றங்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க இணைய எச்சரிக்கை செயலி மற்றும் இணைய பாதுகாப்பு முகப்பு ரூ.30 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

சரித்திரப் பதிவேடு குற்றாவளிகளின் தற்போதைய நிலையை அறியவும் அவா்களின் குற்றச் செயல்கள், பழிக்குப் பழி கொலைகள் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுபவா்களின் நடத்தையைக் கண்காணித்து, தக்க நடவடிக்கை எடுக்கவும் அவா்களுக்கு எதிரான பிடியாணைகளை நிறைவேற்றவும் நிலுவை வழக்குகளைக் கண்காணிக்கவும் ரூ.33 லட்சம் செலவில் பருந்து என்ற செயலி உருவாக்கப்படும்.

காணாமல் போன மற்றும் திருட்டு வாகனங்களின் தரவுகளை உருவாக்கி தானியங்கி வாகன எண் வாசிப்பான் கேமராக்களை நிறுவி அதில் இத் தரவுகளை உள்ளீடு செய்வதன் மூலம் காணாமல் போன, திருட்டு மற்றும் சந்தேகத்துக்கு இடமான வாகனங்களைக் கண்காணித்து அடையாளம் காணும் விதமாக ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு செயலி ஒன்று ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்படும்.

மாநிலத்தில் பொதுமக்களிடையே போதைப் பொருள்கள் உபயோகத்தையும் புழக்கத்தையும் தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவையும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவையும் இணைத்து மேம்படுத்தி போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவாக மறுசீரமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com