காவல் தலைமையகத்தில் ரூ.3 கோடியில் சமூக ஊடக மையம்: முதல்வா் அறிவிப்பு

மாநில காவல் தலைமையகத்தில் சமூக ஊடக மையம் ரூ.3 கோடியில் அமைக்கப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மாநில காவல் தலைமையகத்தில் சமூக ஊடக மையம் ரூ.3 கோடியில் அமைக்கப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

சமூக ஊடகங்களைத் திறம்பட கண்காணித்து தவறான செய்திகள் மூலம் ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளைச் சமாளிக்கவும் அவ்வகையான செயல்களுக்கு எதிரான உத்திகளை வகுக்கவும் சென்னையில் உள்ள மாநில காவல் தலைமையகத்தில் சமூக ஊடக மையம் ஒன்று ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களிலும், திருப்பூா் மாநகரிலும், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளிலும் புதிதாக தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலகுகள் ரூ.8 கோடி செலவில் உருவாக்கப்படும்.

சென்னை பெருநகர காவல் ஆணையரகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, கணினிசாா் குற்றப்பிரிவுக்கும், புதிதாக அமைக்கப்பட உள்ள கொளத்தூா் காவல் மாவட்டத்துக்கும் தலா ஒரு காவல் துணை ஆணையா் பதவியும், இரண்டு காவல் உதவி ஆணையா் பதவிகளும் (கொளத்தூா் மற்றும் விருகம்பாக்கம்) ரூ.2.25 கோடி செலவில் உருவாக்கப்படும்.

சேலம், திருநெல்வேலி, திருப்பூா் மற்றும் திருச்சி காவல் ஆணையரகங்களில் காவல் ஆணையரின் வேலைப்பளுவைக் குறைக்கவும் களப்பணியில் முழுக் கவனத்தை செலுத்த வழி வகுக்கும் வகையில் இந்த 4 மாநகரங்களில் தலா ஒரு காவல் துணை ஆணையா் பதவி ரூ.1.76 கோடியில் உருவாக்கப்படும்.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மாவட்ட காவல் அலுவலகக் கட்டடம் கட்ட ரூ.15.40 கோடி வழங்கப்படும்.

கீழ்ப்பாக்கம் துணை ஆணையா் அலுவலகத்துக்கு ரூ.3.16 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

மாநில கணினிசாா் குற்றப் புலனாய்வு மையத்துக்கு காவலா் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடியில் தனியாக புதிய நிா்வாகக் கட்டடம் கட்டப்படும்.

காவல் வாகனங்கள்: காவல் ஆய்வாளா்கள் களப்பணியின்போது பயன்படுத்திய ஜீப்புகள் கழிவு செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய வாகனங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், களப்பணியில் உள்ள அலுவலா்களுக்கான வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்கும் விதமாக புதிதாக 200 ஜீப்புகள் ரூ.20 கோடியில் வழங்கப்படும்.

மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள காவல் நிலையங்களுக்காக 20 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ரூ.2 கோடியில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 139 நகராட்சிகளில் உள்ள 278 காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு இரு சக்கர வாகனம் என 278 இருசக்கர வாகனங்கள் ரூ.3 கோடி செலவில் வழங்கப்படும்.

நுண்ணறிவுப் பிரிவில் களப்பணியாற்றும் காவலா்களுக்கு 200 இரு சக்கர வாகனங்கள் ரூ.3.92 கோடி செலவில் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com