கட்டுமான பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்: எடப்பாடி கே. பழனிசாமி

கட்டுமான பொருள்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலுக்கு கொண்டுவந்து விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சேலம் மெய்யனூர் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிருக்கான அம்மா இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட  எடப்பாடி கே.பழனிசாமி.
சேலம் மெய்யனூர் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிருக்கான அம்மா இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட எடப்பாடி கே.பழனிசாமி.

சேலம்: கட்டுமான பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலுக்கு கொண்டுவந்து விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.

சேலம் மெய்யனூர் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிருக்கான அம்மா இலவச தையல் பயிற்சி மையத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தையல் பயிற்சி மையத்தில் 10 நவீன தையல் இயந்திரங்கள் கொண்டு பயிற்சி அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய பெண்கள், சுய தொழில் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும் வகையில் இதுபோன்ற இலவச தையல் பயிற்சி மையத்தை அதிமுக சார்பில் தொடங்கப்பட்டு வருகிறது.

சொத்து வரி உயர்வு: திமுக 70 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். சொத்து வரியை உயர்த்தி மக்களுக்கு அரசு துரோகம் அளித்துள்ளனர். மக்களுக்கு வேதனை அளிக்கிறது. 

காவிரி டெல்டா பகுதியில் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என்பதற்காக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என கடந்த ஆட்சியில் அறிவித்தோம். இந்த சட்டத்தின் மூலம் டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலையும் கொண்டுவர முடியாது.

எட்டு வழிச் சாலை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது இத்திட்டத்தை கொண்டு வர திமுக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், திமுக கூட்டணி கட்சிகள் இன்று வாய்மூடி மௌனமாக உள்ளனர். 

எட்டு வழிச் சாலையால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பது எனது நிலைப்பாடு. நானும் விவசாயி தான். விவசாயிகள் பாதிக்காத வகையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

உள்கட்டமைப்பு முக்கியம்: நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முக்கியமாகும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

கட்டுமான பொருள்கள் விலை உயர்வு: கட்டுமான பொருள்களின் விலையை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியல் கொண்டுவர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

சிமென்ட், கம்பி, செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வீடு கட்டுபவர்கள் துன்பத்தில் உள்ளனர்.

பேருந்து, மின் கட்டணத்தை உயர்த்த திட்டம்: மின்வாரியம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட துறைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் போதிய நிதி ஆதாரத்தை மேம்படுத்தாமல் மின் கட்டணத்தையும், பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்த உள்ளது. நிர்வாகத் திறமையோடு செயல்பட்டு நஷ்டத்தை சரிப்படுத்த வேண்டும் என்று பழனிசாமி கூறினார். 

நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com