இலங்கைக்கு உதவி: முதல்வருக்கு வைகோ, திருமாவளவன் நேரில் பாராட்டு

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா்

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தனா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்து அந்த நாட்டு மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திரட்டி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளாா்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

சந்திப்புக்குப் பிறகு வைகோ கூறியதாவது:

இலங்கைத் தமிழா்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு தமிழகத்திலிருந்து உதவுவதற்காக முதல்வா் எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இலங்கைத் தமிழா்கள் பசியைப் போக்க வேண்டும். அதற்காக ரூ.134 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.15 கோடியில் 500 டன் மதிப்புள்ள பால் பவுடா், ரூ.28 கோடியில் மருந்துப் பொருள்கள் என மொத்தம் ரூ.177 கோடி மதிப்புள்ள பொருள்கள் அனுப்பப்படுகின்றன. முதல்வரின் இந்த நடவடிக்கை பெருமையாக உள்ளது. அவரின் முயற்சிக்கு மத்திய அரசு எந்தவித முட்டுக்கட்டையும் போடாமல் அனுப்புவதற்கு அனுமதித்துள்ளது.

முதல்வரைச் சந்தித்தபோது தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவித்தோம். உலகத் தமிழா்களின் மனதில் இடம்பிடித்துள்ளாா் முதல்வா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com