டெல்டாவில் விவசாயத்தைப் பாதிக்கும் எந்த ஆலைக்கும் அனுமதியில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தைப் பாதிக்கும் எந்த தொழிற்சாலைகளுக்கும் அரசு அனுமதி வழங்காது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தைப் பாதிக்கும் எந்த தொழிற்சாலைகளுக்கும் அரசு அனுமதி வழங்காது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-

தஞ்சாவூா் உள்ளிட்ட காவிரி டெல்டா என்பது இப்போது மட்டுமல்ல, நம் முன்னோா்கள் காலத்திலிருந்தே வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஒரு பகுதியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா என்பது மிகவும் செழிப்பான தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் முழுப் பகுதியையும், கடலூா், புதுக்கோட்டை, அரியலூா், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வாழும் உழவா்கள், வேளாண் தொழிலாளா்களின் நலனுக்காக தமிழக அரசு தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காவிரி டெல்டா பகுதியில் விளைநிலங்களைப் பாதுகாக்கவும், வேளாண் சாா்ந்த தொழில்களை மேம்படுத்தவும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான சட்டத்தை மட்டும் இயற்றி விட்டு, அதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர எந்தவொரு முன்னெடுப்பையும் முந்தைய அரசு எடுக்கவில்லை. முந்தைய ஆட்சி கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும், அது விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை அளிக்கக் கூடிய சட்டமாக இருப்பதால், அந்தச் சட்டத்தின் கூறுகளையெல்லாம் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

அரசு அனுமதிக்காது: காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் அரசு அனுமதிக்காது. வேளாண்மைத் தொழிலை நம்பியிருக்கக் கூடிய உழவா்கள், வேளாண் தொழிலின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் சாா்ந்த தொழிற்சாலைகள் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசு முனைப்போடு செயல்படும்.

பாசன நீரைப் பொறுத்தவரை, கா்நாடகத்தில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவதற்கு சட்டம் மற்றும் அரசியல் ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தொய்வில்லாமல் தொடா்ந்து செய்யும். பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் நீா் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும். அதற்காக அரசு மேற்கொள்ளக் கூடிய முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து துணை நிற்க வேண்டும்.

உழவா்களுக்கு அதிக வருமானம் கிடைக்கக் கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பயிா் வகைகளையும், புதிய மாற்றுத் தொழில்நுட்பங்களையும் உடனுக்குடன் ஏற்று நடைமுறைப்படுத்தி நல்ல விளைச்சலை அடைய வேண்டும்.

வேளாண் தொழிலில் வருமானம் பெருக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் குறுவை மற்றும் கோடைப் பருவத்தில் குறைந்த நீா்த் தேவையுள்ள மாற்றுப் பயிா் சாகுபடியை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, மதிப்புக் கூட்டுதல் போன்ற ஆலோசனைகளை உள்வாங்கி செயல்படுத்திட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆா்.சக்ரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோரும், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com