தமிழகத்தின் தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிப்பு 

18-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை தழுவிய, தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளையை புனிதராக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
தமிழகத்தின் தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிப்பு 

18-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை தழுவிய, தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளையை புனிதராக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ள வாடிகன் சிட்டியில் அமைந்திருக்கும் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பலி நிகழ்வில் தேவசகாயம் பிள்ளையுடன் சேர்த்து 10 பேருக்கு புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார்.

இதன்மூலம், இந்தியாவைச் சேர்ந்த முதல் சாதாரண மனிதருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பதோடு, தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும்.

கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலம் கிராமத்தில் 1712- ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி ஹிந்து நாயர் குடும்பமான வாசுதேவன் - தேவகியம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவருடைய இயற்பெயர் நீலகண்டன். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் மீது பற்றுகொண்ட இவருக்கு, 1745-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி ஞானஸ்நானம் வழங்கப்பட்டது.

கிறிஸ்தவ மத போதனைகளை ஆற்றும்போது, "அனைத்துத் தரப்பு மக்களும் ஜாதி வேறுபாடுகளைக் கடந்த சமமானவர்கள்' என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இதனால், ஆத்திரமடைந்த சில பிரிவினர் அவரை ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் 1752-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சுட்டுக் கொன்றனர்.

கிறிஸ்தவ மத நம்பிக்கைக்காக தனது உயிரைத் தியாகம் செய்ததால், கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் மறைசாட்சியாக தேவசகாயம் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று கன்னியாகுமர் கோட்டாறு மறை மாவட்டம் சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை ஏற்று, புனிதர் பட்டம் வழங்குவதற்கான முதல் நிகழ்வாக, 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி தேவசகாயம் பிள்ளை ஆசீர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.

பின்னர், அவரை புனிதராக போப் பிரான்சிஸ் கடந்த 2014-ஆம் ஆண்டு அங்கீகரித்தார். அவருக்கு வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார்.

நிகழ்வில் தமிழக பிரதிநிதிகள்: வாடிகனில் நடைபெற்ற புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழக அரசின் பிரதிநிதிகளாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிக்கப்பட்டபோது, நிகழ்வில் பங்கேற்றிருந்த இந்திய குழுவினர் கைகளில் வைத்திருந்த மூவர்ணக் கொடியை அசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com