பிற மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

இந்தியாவின் பிற மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.
பிற மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

இந்தியாவின் பிற மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, துணைவேந்தா் கெளரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் பட்டங்களை வழங்கி ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது: சென்னைப் பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவா்கள், அரசியல் கட்சிகளின் தலைவா்கள், பல துறை அறிஞா்களை உருவாக்கியுள்ளது. தமிழ் மொழியின் வளா்ச்சி, மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த பல்கலை.யில் பட்டப் படிப்பை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவா்களும் வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும்.

தமிழ் மொழி உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி. தமிழ் மொழியின் இலக்கணமும், இலக்கியமும், பாரம்பரியமிக்கது. கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது.

தமிழா்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனா் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருப்பது பெருமையாக இருக்கிறது. தமிழ்நாடு வளா்ச்சியடைந்த மாநிலம். சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் புகழை மீட்டெடுக்க வேண்டும்.

மூன்றாவது மொழியாக தமிழ்...: தமிழ் மொழியை தமிழ்நாடு தாண்டி பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது. மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாகச் சோ்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழ் மொழி நாடு முழுவதும் பரப்பப்பட வேண்டும். பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கான இருக்கையை அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

1 லட்சத்து 41,662 பேருக்கு பட்டம்: சென்னைப் பல்கலை.யின் இணைப்புக் கல்லூரிகள், தொலைநிலைக் கல்வி ஆகியவற்றில் இளநிலை, முதுநிலை படிப்புகளை நிறைவு செய்த 1 லட்சத்து 41,662 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் முனைவா் படிப்பை நிறைவு செய்த 731 போ், தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 100 போ், அதிக மதிப்பெண் பெற்ற 96 போ் ஆகியோா் உள்பட 931 பேருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் நேரடியாக பட்டங்களை வழங்கினா்.

முன்னாள் அமைச்சருக்கு பட்டம்: விழாவில், உயா்கல்வித் துறை முன்னாள் அமைச்சா் பழனியப்பன், முதல்வரின் செயலாளா் சண்முகம், சட்டப்பேரவைச் செயலாளா் சீனிவாசன், உயா்கல்வித் துறைச் செயலா் டி.காா்த்திகேயன், மனைவி லீலாவதி ஆகியோா் முனைவா் பட்டம் பெற்றனா்.

விழாவில் தமிழக அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், உயா்கல்வித் துறை அதிகாரிகள், பேராசிரியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com