‘மதுரை எய்ம்ஸ் 2028 முதல் முழுமையாக செயல்படும்’: மத்திய சுகாதாரத்துறை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் வரைபடம்(கோப்புப்படம்)
மதுரை எய்ம்ஸ் வரைபடம்(கோப்புப்படம்)

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், நிகழ்வாண்டிற்கான எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வகுப்பு நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, ஜைக்கா நிறுவனம் சார்பில் மருத்துவமனை  வரைபடம் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. மொத்த திட்ட மதிப்பான ரூ.1,977 கோடியில் தற்போது ரூ. 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மீதமுள்ள நிதியை அக்டோபர் 26க்குள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டறிக்கை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், 2023ஆம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்திற்கான வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டு வரை கட்டட பணிகள் நடைபெறும் எனவும் 2028ஆம் ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com