முன்மாதிரிப் பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு பாடத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் முன்மாதிரிப் பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த பாடத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
முன்மாதிரிப் பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு பாடத் திட்டம் அறிமுகம்

மதுரை: தமிழகம் முழுவதும் முன்மாதிரிப் பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த பாடத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியது: தமிழகத்தில் உள்ள மொத்த சாலைகளில் தேசிய நெடுஞ்சாலை 2 சதவீதமும், மாநில நெடுஞ்சாலைகள் 3 சதவீதமும் உள்ளன.  கடந்த ஆண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் 14,912 பேர் உயிரிழந்துள்ளனர். 

சாலை விபத்துகளை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய கூட்டம் நடத்தப்படுகிறது. 

மதுரை மாவட்டத்தில்  2021}இல்  2,282 விபத்துகளில் 707 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  

பெரியார் பேருந்து நிலையம் முதல் யானைக்கல் வரை உயர்மட்ட பாலம் அமைக்கவும், மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை முதல் அவனியாபுரம் புறவழிச் சாலை சந்திப்பு பெரியார் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

வாகன உரிமம் வழங்குவது, வாகன கூடு கட்டுமானப் பணி, சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதைத் தடுப்பது ஆகியவற்றில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சாலைப் பாதுகாப்பு குறித்த பாடத் திட்டம் நெடுஞ்சாலைத் துறையால் தயார் செய்யப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக முன்மாதிரிப் பள்ளிகளில் இப் பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

இதில், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன்,  பங்கேற்றனர். முன்னதாக  யா.ஒத்தக்கடை வேளாண் கல்லூரி சந்திப்பு முதல் உத்தங்குடி சுற்றுச்சாலை வரை 5 கிமீ}க்கு ரூ.50.60 கோடியில் சாலை விரிவாக்கப் பணியை அமைச்சர் வேலு தொடக்கி வைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com