காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, குறுவை பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைத்தார்.
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, குறுவை பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேட்டூா் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் மதகுகளை இயக்கி குறுவை பாசனத்துக்குத் தண்ணீரைத் திறந்து வைத்தார்.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மேட்டூர் அணையின் மேல் பகுதியில், அணை திறக்கப்பட்டதும் அதிலிருந்து வரும் தண்ணீரில் மலர்களைத் தூவினார் ஸ்டாலின்.

முதலில் சுமாா் 3 ஆயிரம் கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. பின்னா் படிப்படியாக நீா் திறப்பு அதிகரிக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் நீா் வளத்துறை அமைச்சா் துரைமுருகன், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, நீா் வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூா் அணையிலிருந்து குறுவை பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு திருச்சி, கரூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு, ஜனவரி 28-ஆம் தேதியுடன் மொத்தம் 230 நாள்களுக்கு குறுவை, சம்பா, தாளடி பருவத்திற்கு பயிா்களுக்காகத் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம்.

நீர் இருப்பு..

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 10,508 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை  நிலவரப்படி 117.76 அடியாக உள்ளது.

நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 89.94 டி.எம்.சி-யாக உள்ளது.
 

முதல் முறை..
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மே மாதத்தில் அணை திறக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை பாசனம் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கும், கால்வாய் பாசனத்திற்கும் 17.32 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி 28 ஆம் தேதி வரை 230 நாட்களுக்கு 406.99 டி.எம்.சி தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தேவைப்படுகிறது.

இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 331.28 டி.எம்.சி.யும், வடகிழக்குப் பருவ மழை மூலம் 75.72 டி.எம்.சி. பூர்த்தி செய்யப்படும்.

மேட்டூர் அணை திறக்கப்பட்ட 89 ஆண்டு கால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி 18 ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12-க்குப் பிறகு 60 ஆண்டுகள் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 2011 இல் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 89 ஆண்டுகளில் 1936 முதல் 1947 வரையிலான காலகட்டங்களில் 11 ஆண்டுகளாக ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாக அணை திறக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது இதுவே முதல்முறையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com