இறந்தவரின் ஆவியை வீட்டிற்கு அழைக்கும் விநோத நிகழ்வு: ஊசூர் அருகே மலைவாழ்மக்கள் திருவிழா

ஊசூர் அருகே குருமலையில் அம்மன் கோயில் திருவிழாவில் இறந்தவரின் ஆவியை வீட்டிற்கு அழைத்து வரும் வினோத நிகழ்வை மலைவாழ்மக்கள் நடத்தினர்.
இறந்தவரின் ஆவியை வீட்டிற்கு அழைக்கும் விநோத நிகழ்வு: ஊசூர் அருகே மலைவாழ்மக்கள் திருவிழா

ஊசூர் அருகே குருமலையில் அம்மன் கோயில் திருவிழாவில் இறந்தவரின் ஆவியை வீட்டிற்கு அழைத்து வரும் வினோத நிகழ்வை மலைவாழ்மக்கள் நடத்தினர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் உள்ள குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை, பள்ளகொல்லைமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மலை வாழ்மக்கள் ஆண்டுதோறும் மலையில் உள்ள செல்லியம்மன், தஞ்சியம்மனுக்கு திருவிழா நடத்துகின்றனர்.

எப்போது திருவிழா நடத்தினாலும் அதற்கு முன்பு குறிகேட்டு கடந்தாண்டு விழா நடத்திய பிறகு ஓராண்டில் மலையில் இறந்தவர்கள் மற்றும் வெளியூருக்கு சென்று இறந்தவர்களின் ஆவியை வீட்டுக்கு அழைத்து வந்து விழா நடத்துவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு விழா நடத்த, மலையில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் திரண்டு கோயில் அருகே பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தொடர்ந்து, இரவு குறிகேட்டு, பெண்கள் கும்மியடித்தும், தெய்வங்கள் வந்தபடி ஆடிப்பாடியும் இறந்தவர்களது ஆவியை கூவிக்கூவி அழைத்தனர்.

மலைவாழ் மக்களில் இறந்தவர்களின் ஆவியை மலையின் நுழைவு வாயிலில் இருந்து மேளதாளத்துடன் கரகம், சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்து அவர்கள் இறப்பதற்கு முன்பு வசித்த வீடுகளில் விட்டுச் சென்றனர். அவர்கள் குடும்பத்தினர் இறந்தவர்களின் ஆவியை ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.

இதையடுத்து, மலையிலே ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு சிறப்பு விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. தொடர்ந்து, விழாவானது மீண்டும் குறிகேட்கபட்டு அது உத்தரவு தரும் வாரங்களில் நடத்தப்படுகிறது.

குருமலையில் ஆண்டுதோறும் மலைவாழ் மக்கள் அம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு முன்பாக ஓராண்டில் இறந்தவர்களின் ஆவியை வீட்டுக்கு அழைத்து வந்து  குறிகேட்டு விழா நடத்தி வரும் இந்த வினோத நிகழ்வு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com