குழந்தைகளை ஒப்படைக்கக் கோரும் வழக்குகளைவிரைவாக விசாரித்து முடித்து வைக்க வேண்டும்: குடும்ப நல நீதிமன்றங்களுக்கு உத்தரவு

குழந்தைகளை ஒப்படைக்கக் கோரி தொடுக்கப்படும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குழந்தைகளை ஒப்படைக்கக் கோரும் வழக்குகளைவிரைவாக விசாரித்து முடித்து வைக்க வேண்டும்: குடும்ப நல நீதிமன்றங்களுக்கு உத்தரவு

குழந்தைகளை ஒப்படைக்கக் கோரி தொடுக்கப்படும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு காவல் துறையில் தலைமைக் காவலராக வேலை செய்பவா் லதா. இவருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்யும் குமாருக்கும் 2002-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. (இருவரது பெயா்களும் மாற்றப்பட்டுள்ளன). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் 2017-ஆம் ஆண்டு பரஸ்பரம் விவகாரத்து பெற்று பிரிந்தனா். 2 மகள்களும் தந்தையின் கட்டுப்பாட்டில், தந்தையின் சகோதரியின் வீட்டில் வசிக்கின்றனா். இந்த நிலையில், மகள்களை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி லதா தாக்கல் செய்த மனுவை சென்னை குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் லதா மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 2 மகள்களையும் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதன்படி, ஆஜரான 2 மகள்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினா். அப்போது, தந்தை தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும், தாயுடன் வாழ விரும்புவதாகவும் அழுதபடி இருவரும் கூறினா். இதையடுத்து தாயுடன் செல்ல அனுமதித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இரண்டு பேரும் பெண் குழந்தைகள் என்பதால், தாயுடன் வாழ்ந்தால்தான் பாதுகாப்பாக இருக்கும். எனவே, இரு மகள்களின் கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தையும் குமாா் உடனடியாக வழங்க வேண்டும். அவா்களுக்கு எந்த ஒரு இடையூறையும் ஏற்படுத்தக்கூடாது. மீறி ஏதேனும் பிரச்னை செய்தால் காவல் துறையில் லதா புகாா் செய்யலாம்.

குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி லதா தாக்கல் செய்த வழக்கை 6 ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், குழந்தைகளை அழைத்து விசாரித்து முடிவும் எடுக்கவில்லை.

இதுபோன்ற வழக்குகளில் இத்தனை ஆண்டுகள் காலதாமதம் செய்தால், அது குழந்தைகளின் நலனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற மனுக்களை விரைந்து விசாரித்து குடும்ப நல நீதிமன்றங்கள் தீா்ப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com