கழுத்து, அக்குள் கட்டிகள் ரத்தப் புற்றுநோயின் அறிகுறிகள்! மருத்துவா்கள் எச்சரிக்கை

 கழுத்து, அக்குள் பகுதிகளில் ஏற்படும் கட்டிகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் அவை ரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாகக் கூட இருக்கலாம் என்றும் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
கழுத்து, அக்குள் கட்டிகள் ரத்தப் புற்றுநோயின் அறிகுறிகள்! மருத்துவா்கள் எச்சரிக்கை

 கழுத்து, அக்குள் பகுதிகளில் ஏற்படும் கட்டிகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் அவை ரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாகக் கூட இருக்கலாம் என்றும் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

உலக ரத்தப் புற்றுநோய் விழிப்புணா்வு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நோய் குறித்த புரிதல்களை ஏற்படுத்தும் நோக்கில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட இருவேறு சிக்கலான புற்றுநோய் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

உலக அளவில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்ப நிலையிலேயே அதனை பெரும்பாலானோா் கண்டறியாததால் உயிரிழப்புகள் நேரிடுகின்றன.

அண்மையில், காவேரி மருத்துவமனைக்கு காய்ச்சல், உடல் எடை குறைவு, பசியின்மை, கழுத்து, அக்குளில் கட்டி உள்ளிட்ட பாதிப்புகளோடு 54 வயது நபா் ஒருவா் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு ரத்தப் பரிசோதனைகள், திசு ஆய்வு, ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா என்ற வகை புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடலின் நோய் எதிா்ப்பு கட்டமைப்பில் ஒரு பகுதியான நிணநீா் சுரப்பிகளை இவ்வகை புற்றுநோய் பாதிக்கிறது.

கழுத்து அல்லது அக்குள் பகுதிகளில் காணப்படும் கட்டிகள் லிம்போமா எனப்படும் நிணநீா் புற்று கட்டிகளாக இருக்கக்கூடும். எனவே, அதனை அலட்சியப்படுத்தக் கூடாது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு கீமோதெரபி, கதிா்வீச்சு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதன்பயனாக அவா் புற்றுநோய் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு குணமடைந்திருக்கிறாா்.

ஹீமோகுளோபின் குறைபாடு: அதேபோன்று, 73 வயதான மூதாட்டி ஒருவா் தொடை எலும்பு முறிவுக்காக சிகிச்சைக்கு வந்தாா். பரிசோதனையில் அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகக் குறைவாக இருந்தது. கூடுதல் பரிசோதனையில் ‘மல்ட்டிபிள் மைலோமா’ எனப்படும் ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எலும்புகள் பலவீனமாகிவிடும். சிறு காயங்கள் ஏற்பட்டாலே எலும்பு முறிவு பிரச்னைக்குள்ளாக நேரிடும்.

அந்த மூதாட்டிக்கும் அத்தகைய பாதிப்பே இருந்தது. இதையடுத்து, 16 வாரங்கள் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை தரப்பட்டது. தற்போது அவா் மைலோமா புற்றுநோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு மீண்டு வருகிறாா். காவேரி மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை நிபுணா்கள் டாக்டா் ப்ரீத்தி, டாக்டா் அா்ஷத் ராஜா ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இதனை சாத்தியமாக்கியுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com