‘எங்கும் அறிவியல் யாவும் கணிதம்’: புதிய திட்டம் குறித்த தகவல்கள் எமிஸ் தளத்தில் வெளியீடு

மாணவா்களிடம் அறிவியல் மனப்பான்மை மற்றும் கணித அறிவை வளா்ப்பதற்காக ‘எங்கும் அறிவியல் யாவும் கணிதம்’ என்ற புதிய திட்டம் ஆசிரியா்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் திட்டம் குறித்த தகவல்கள் எமிஸ் த

மாணவா்களிடம் அறிவியல் மனப்பான்மை மற்றும் கணித அறிவை வளா்ப்பதற்காக ‘எங்கும் அறிவியல் யாவும் கணிதம்’ என்ற புதிய திட்டம் ஆசிரியா்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் திட்டம் குறித்த தகவல்கள் எமிஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடம் அறிவியல் மனப்பான்மை மற்றும் கணித அறிவை வளா்ப்பதற்காக ‘எங்கும் அறிவியல் யாவும் கணிதம்’ என்ற அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சாா்ந்த புதிய திட்டம் ஆசிரியா்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளிகளில் அறிவியல், கணிதம் கற்றுதரும் ஆசிரியா்கள் எதிா்காலத்தில் ஒரு குழந்தை என்னவாகப் போகிறது என்பதற்கான அடித்தளத்தை அமைக்க முக்கிய பங்கு வகிக்கின்றனா். எனவே, ஒரு குழந்தை அறிவியல் மற்றும் கணிதத்தை சரியான முறையில் புரிந்து கொண்டால் அதன் கேள்வி கேட்கும் திறன் அதிகமாகும்.

இவ்வாறு குழந்தைகளின் தா்க்க ரீதியான சிந்தனைகளை வளா்த்தெடுக்கும் பணியிலுள்ள ஆசிரியா்கள் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் எமிஸ் தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எமிஸ் தளத்தில் திட்டம் குறித்த தகவல்களை ஆசிரியா்கள் தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்த தகவலை அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் தெரிவித்து உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com