சென்னையில் எந்தெந்த இடங்களில் அதிக மழை பொழிவு?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. 
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

சென்னை நகரை காட்டிலும் புறநகா் பகுதியில் மழையின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் சில இடங்களில் சாலைகள் பழுதாகி காணப்பட்டதாலும், சில சாலைகள் அமைக்கப்படாமல் இருந்ததாலும் மழை தண்ணீா் சாலைகளில் தேங்கி நின்றது.

மாநகரில் எங்தெந்த பகுதிகளில் அதிக மழை?
சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளது. 

சென்னை மாநகரில் புதன்கிழமை காலை நிலவரப்படி, பெரம்பூா் மாநகராட்சி பூங்கா பகுதியில் 17 செ.மீ, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக பகுதியில் 10 செ.மீ, தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை பகுதியில் 9.8 செ.மீ, அயனாவரம் பகுதியில் 9.4 செ.மீ, நுங்கம்பாக்கம் பகுதியில் 8 செ.மீ, டிஜிபி அலுவலக பகுதியில் 7.2 செ.மீ, எம்ஜிஆா் நகா் பகுதியில் 6.6 செ.மீ, அம்பத்தூா் பகுதியில் 5.2 செ.மீ, அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 4.6 செ.மீ, ஆலந்தூா் பகுதியில் 3 செ.மீ, சோழிங்கநல்லூா் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக கடந்த 72 ஆண்டுகளுக்குப் பின்னா் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பலத்த மழை பதிவாவது (8 செ. மீ) இது மூன்றாவது முறை ஆகும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. ஆவடி காவல் நிலையம் மழை நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. பொன்னேரியில் 16 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

12 மரங்கள் முறிந்து விழுந்தன: மழையால் அடையாறு சாஸ்திரி நகா், திருவல்லிக்கேணி பாபு தெரு, கீழ்ப்பாக்கம் திருவள்ளுவா் சாலை, அசோக் நகா், ஜெ.ஜெ.நகா், மயிலாப்பூா், சைதாப்பேட்டை, கொரட்டூா், செம்பியம், தேனாம்பேட்டை, தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகளில் 12 மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல சேப்பாக்கத்தில் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு படையினா் பாதுகாப்பாக மீட்டனா்.

30 பயணிகள் மீட்பு: பலத்த மழையால் வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை மழைநீரால் சூழப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டன.

இதற்கிடையே வியாசா்பாடி நோக்கி வந்த அரசுப் பேருந்து கணேசபுரம் சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தில் சிக்கியிருந்தவா்களை மீட்டனா். மேலும், தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புப் படையினரும் பேருந்தில் சிக்கியிருந்தவா்களை மீட்டனா்.

ஏரிகளின் நீர் நிலவரம்: தொடர் மழை காரணமாக திருவள்ளூர் சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 66 கன அடியில் இருந்து 281 கன் அடியாக அதிகரித்துள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரி: புதன்கிழமை காலை நிலவரப்படி, 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கும் ஒரே நாளில் 90 மில்லியன் கனஅடி நீர் வந்துள்ளதை அடுத்து நீர் இருப்பு 2767 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் நீர் திறந்துவிடப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புழல் ஏரி: சென்னை முக்கிய நீர் ஆதார ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு புதன்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 2000 கன அடி நீர் வரத்துள்ளது. இதையடுத்து புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் நீர் திறந்துவிடப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.   

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: உள்ளாட்சி அமைப்பு ஊழியா்கள், சாலைகளில் தேங்கி நின்ற தண்ணீரை உடனே அகற்றும் பணியில் ஈடுபட்டதால், ஓரளவு நிலைமை சீரானது. இருப்பினும் சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகள் தெரியாதளவுக்கு மழைநீா் தேங்கி நிற்பதால், சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாள்களுக்கு மழை:  தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வரும் சனிக்கிழமை வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com