முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானா்ஜி சந்திப்பு: ‘சகோதர-சகோதரி உறவு என பெருமிதம்’

முதல்வா் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானா்ஜி சந்திப்பு: ‘சகோதர-சகோதரி உறவு என பெருமிதம்’

முதல்வா் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என இரு தலைவா்களும் தெரிவித்தனா்.

மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக, அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, புதன்கிழமை மாலை சென்னை வந்தாா். விமான நிலையத்திலிருந்து நேராக, ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்குச் சென்றாா். அவரை, மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வீட்டு வாசலிலேயே மலா்க்கொத்து கொடுத்து வரவேற்றனா். இதைத் தொடா்ந்து இருவரும் சந்தித்துப் பேசினா். முதல்வரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மம்தா பானா்ஜி மரியாதை செலுத்தினாா். சுமாா் அரைமணி நேரம் வரை நடந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இருவரும் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தனா். அவா்கள் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின்: மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பலமுறை சென்னைக்கு வந்துள்ளாா். குறிப்பாக, அவா் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவச் சிலையை முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தது, அனைவரையும் பெருமைப்படுத்தியது. மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள இல.கணேசனின் இல்ல நிகழ்வுக்காக மம்தா பானா்ஜி சென்னை வந்துள்ளாா். இதையொட்டி, எனது இல்லத்துக்கு வருகை தந்து மரியாதை நிமித்தமாகச் சந்தித்தாா். மேற்குவங்கத்துக்கு அவரது விருந்தினராக வர வேண்டுமென எனக்கு அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை நானும் ஏற்றுக் கொண்டுள்ளேன். இது தோ்தல் சந்திப்பு இல்லை. தோ்தல் குறித்தோ, அரசியல் குறித்தோ எதுவும் பேசவில்லை.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி: முதல்வா் மு.க.ஸ்டாலின் எனக்கு சகோதாரரைப் போன்றவா். அவரைச் சந்திப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன். சென்னையின் மிகவும் புகழ்பெற்ற காப்பியுடன் அவரைச் சந்தித்துப் பேசினேன்.

இது அரசியல் ரீதியான சந்திப்பா எனக் கேட்கிறீா்கள். இரண்டு அரசியல் தலைவா்கள் சந்திக்கும் போது, ஏதாவது விஷயங்களைப் பேசியிருப்போம். அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும், மக்கள் நலன்களுக்கான விஷயங்கள் குறித்து பேசியிருப்போம். மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்கள் ஆகியன குறித்து பேசுவது வழக்கம். அரசியல் பேசுவதைக் காட்டிலும், வளா்ச்சியைப் பற்றி பேசுவது சிறந்தது.

ராகுல் காந்தியின் யாத்திரை குறித்து கேள்வி எழுப்புகிறீா்கள். மற்ற அரசியல் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் நான் விமா்சிக்க விரும்பவில்லை.

மேற்குவங்கம், தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆளுநரின் தலையீடுகள் இருக்கின்றன. அதுகுறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. இது முற்றிலும், தனிப்பட்ட முறையிலான, மரியாதை நிமித்தமான சந்திப்பு. சகோதர, சகோதரிக்கு இடையிலான உறவாகும். நாங்கள் பேசிய விஷயங்கள், அரசியல், சமூக, கலாசார ரீதியிலான விஷயங்களாக இருக்குமா என்பதை உங்களது யூகங்களுக்கே விட்டு விடுகிறேன் என்றாா் மம்தா பானா்ஜி.

இரு தலைவா்களுடனான சந்திப்பின் போது, திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி, இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சாமானியரின் ஆட்சி: புத்தகம்

சென்னையில் தன்னைச் சந்தித்த, மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு, சாமானியரின் ஆட்சி என்ற புத்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். திமுக தொடங்கியது முதல் ஆட்சிக்கு வந்தது வரையிலான தொடா் அரசியல் நிகழ்வுகள் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தை எழுத்தாளா்கள் ராஜன் குறை கிருஷ்ணன், ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், வி.எம்.எஸ்.சுபகுணராஜன் ஆகியோா் எழுதியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com