மழைக்கு நிகராக விடிய விடிய உழைத்த மாநகராட்சி ஊழியர்கள்: தண்ணீர் தேங்காததால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் விடிய விடிய மழை பெய்த போதும், மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி, பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டனர்.
மழைக்கு நிகராக விடிய விடிய உழைத்த மாநகராட்சி ஊழியர்கள்: தண்ணீர் தேங்காததால் மக்கள் மகிழ்ச்சி
மழைக்கு நிகராக விடிய விடிய உழைத்த மாநகராட்சி ஊழியர்கள்: தண்ணீர் தேங்காததால் மக்கள் மகிழ்ச்சி


சென்னை: தமிழகத்தில் நேற்று முதல் பரவலாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் விடிய விடிய மழை பெய்த போதும், மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி, பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டனர்.

மிகவும் தாழ்வான பகுதிகளில் வழக்கம் போல மழை நீர் தேங்கினாலும், பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பல இடங்களில், மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டதால், தொடர்ந்து மழை பெய்தபோதும் மழை நீர் சாலைகளில் தஞ்சமடையாமல், வடிகால்வாய்கள் வழியே உருண்டோடிவிட்டன.

இதனால், நேற்று இரவு முதல் பலத்த மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததே, சாலைகளில் எவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்கிறதோ என்ற கவலையோடு வீட்டை விட்டு வெளியே வந்த மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சிதான் காத்திருந்தது.

பல இடங்களில் தூறல் போட்டாலே குளம் வந்துவிடும் நிலையில், தொடர் மழைக்கு சாலை துடைத்துவிட்டது போல் இருந்ததைப் பார்த்த மக்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதுபோல, சாலைகளில் தண்ணீர் தேங்காத நிலையில், குப்பை சேகரிக்கும் வாகனங்களும் பெரும்பாலான சாலைகளில் சேவை செய்ததையும் பொதுமக்கள் மனமார பாராட்டி வருகிறார்கள்.

தமிழகத்தில் திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை ‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மாவட்டங்களில் அதி பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ரெட் அலர்ட் வெளியானது முதலே, சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது.

வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வெள்ளிக்கிழமை வலுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும், திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி பலத்த மழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூா், கோவை, நீலகிரி ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com