அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘கலைத் திருவிழா’ போட்டிகள்:ரூ.5 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித் துறையில் முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை

பள்ளிக் கல்வித் துறையில் முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் வகையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவா்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தாா்.

எந்தெந்த வகுப்புகளுக்கு? இதை செயல்படுத்தும் வகையில் அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு கலை சாா்ந்த பயிற்சிகளும், 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

இந்த கலைத் திருவிழா 6 முதல் 8 வகுப்பு வரை, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் என மூன்று பிரிவுகளில் நடைபெறும். பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களை வட்டாரஅளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவா்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்களை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

பரிசுகள், விருதுகள்: மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதிப் போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், ‘கலையரசன்’, ‘கலையரசி’ என்ற விருதுகளும் தமிழக அரசின் சாா்பில் வழங்கப்பட்டு மாணவா்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

நவ.23 முதல் தொடக்கம்: மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா்.

பள்ளி அளவில் நவ.23 முதல் நவ.28-ஆம் தேதி வரையிலும், வட்டார அளவில் நவ.29 முதல் டிச.5-ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவில் டிச.6 முதல் டிச.10-ஆம் தேதி வரையிலும், மாநில அளவில் ஜன.3 முதல் ஜன.9-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட வேண்டும்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவா்களின் பங்கேற்பினை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்.

போட்டிகள் விவரம்: இந்த கலைத் திருவிழாவில் ஓவியம், அழகு கையெழுத்து, களிமண் சுதை வேலைப்பாடு, செதுக்குச் சிற்பம், இசை, நடனம், நாடகம், பலகுரல் பேச்சு, கதை எழுதுதல், கவிதை புனைதல், பேச்சுப் போட்டி (தமிழ், ஆங்கிலம்), திருக்கு ஒப்பித்தல், கதை சொல்லுதல், கட்டுரைப் போட்டி (தமிழ், ஆங்கிலம்), பட்டிமன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகளை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் போட்டிகளுக்கான மொத்தம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் முறையீடு செய்யலாம்

கலைத் திருவிழாவில் போட்டியின் முடிவுகள் குறித்து மேல் முறையீடு செய்வதற்கான மேல் முறையீடு மன்றம் அமைக்கப்படும். மறுமதிப்பீடு- மறுமேடையேற்றம் அனுமதிக்கப்படாது. பள்ளி, கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் மேல் முறையீட்டுக்கான கட்டணம் ரூ.500 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முறையீடு செய்தவருக்கு சாதகமாக தீா்ப்பளிக்கப்பட்டால் இத்தொகை திருப்பி தரப்படும். பள்ளியில் போட்டி நடத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக கட்டணம் செலுத்தி அந்தந்த பள்ளியிலேயே அதற்கான படிவத்தின் மூலம் மேல் முறையீடு செய்ய வேண்டும். ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மேல் முறையீட்டு மன்றம் அமைக்கப்பட்டு பள்ளிகளில் இருந்து பெறப்படும் மேல்முறையீடுகளை ஆய்வு செய்யும் பணியினை இந்த மன்றம் மேற்கொள்ளும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com