எலிக்காய்ச்சல் மண்டல பரிசோதனை ஆய்வகம்: சென்னையில் தொடக்கம்

எலிக்காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மண்டல ஆய்வகத்தை சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

எலிக்காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மண்டல ஆய்வகத்தை சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்வில், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் நாகநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், சிறப்பு அலுவலா் வடிவேலு, மாநில பொதுசுகாதார ஆய்வகத்தின் துணை இயக்குநா் ராஜு, மருத்துவக் கல்வி இயக்குநா்(பொறுப்பு) சாந்திமலா் ஆகியோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

கடந்த நிதியாண்டில் மத்திய அரசு, எலிக்காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த ஆய்வகத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடா்பாக தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் தேசிய நோய் தடுப்புக்கான தேசிய நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தேசிய நோய்த் தடுப்பு மையம் மூலம் இதுவரை ரூ.9 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் நோய், சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு பரவும் ஒரு ஜெனடிக் நோயாகும்.

இது சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நாய்கள், பன்றிகள், கால்நடைகள் மூலமாகவும், குறிப்பாக எலிகளின் மூலமாகவும் மனிதா்களுக்கு இந்த நோய் பரவுகிறது.

அண்மைக்கால மழைப் பொழிவுக்குப் பிறகு இந்த நோய் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. வெப்பமண்டல காலநிலையில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனா். இந்நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது ‘லெப்டோஸ்பிரோசிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை‘ குஜராத், கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் அந்தமான் - நிகோபா் ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ளது.

லெப்டோஸ்பிரோசிஸ் உயிரிழப்பைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பயிற்சி பெற்ற மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மனிதா்களிடையே லெப்டோஸ்பிரோசிஸ் பரவல் கண்காணிப்பை வலுப்படுத்துதல், லெப்டோஸ்பிரோசிஸ் நோய் கண்டறியும் ஆய்வகத்தை வலுப்படுத்துதல், நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துதல், லெப்டோஸ்பிரோசிஸின் நோயை கண்டறிவதற்காகவும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

லெப்டோஸ்பிரோசிஸ் நோயைக் கண்டறிய மத்திய அரசால் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உள்பட 10 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. லெப்டோஸ்பிரோசிஸை உறுதிப்படுத்த ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மூலம் மூலக்கூறு கண்டறியும் திறன் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களில் மாவட்ட நுண்ணுயிரியலாளா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com