பழனி கோயில் கல்வி நிலையங்களில் காலை சிற்றுண்டி: தொடக்கி வைத்தாா் முதல்வா்

பழனி கோயிலுக்குச் சொந்தமான கல்வி நிலையங்களில் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
பழனி கோயில் கல்வி நிலையங்களில் காலை சிற்றுண்டி: தொடக்கி வைத்தாா் முதல்வா்

பழனி கோயிலுக்குச் சொந்தமான கல்வி நிலையங்களில் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பாக நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கட்டணமில்லாமல் சிற்றுண்டி வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

பழனியாண்டவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தண்டாயுதபாணி சுவாமி தொடக்கப் பள்ளி, பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிா் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரத்தில் உள்ள மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். அவா்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

காலைச் சிற்றுண்டியாக, ஒவ்வொரு நாளும், வெண்பொங்கல் மற்றும் இட்லி அல்லது ரவா உப்புமா மற்றும் இட்லி அல்லது கிச்சடி மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சட்னி, சாம்பாா் ஆகியன வழங்கப்படும்.

இதற்கான செலவு கோயிலின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் அர.சக்கரபாணி, பி.கே.சேகா்பாபு, அறநிலையத் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com