ஶ்ரீரங்கத்தில் சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு முகாம்: 60 நாள்களுக்கு அன்னதானம்

திருச்சி வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.
ஶ்ரீரங்கத்தில் சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு முகாம்: 60 நாள்களுக்கு அன்னதானம்

திருச்சி:  திருச்சி வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.

இந்த முகாமில், 60 நாள்களுக்கு காலை, மாலையில் அன்னதானம், மருத்துவ முகாம், சபரிமலை செல்ல வழிகாட்டி ஆலோசனை, நடைபயணத்துக்கான துணை உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

சபரிமலையில் 77 ஆண்டுகளாக சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கமானது திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட யூனியன் என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. திருச்சி யூனியன் சார்பில், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சபரிமலை பக்தர்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன்படி, நிகழாண்டுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (நவ.17) தொடங்கியது.

ஶ்ரீரங்கத்தின் அம்மா மண்டபம் சாலையில் காவேரி மஹா புஷ்கரம் நடைபெற்ற இடத்தில் (கோனார் சத்திரம் எதிரில்) இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில், மாவட்ட தலைவர் என். ரமேஷ் தலைமையில், மாவட்ட போஷகர் என்.வி. முரளி, சங்கக் கொடியை ஏற்றி முகாமை தொடக்கி வைத்தார். அன்னதான முகாமை மாநிலத் தலைவர் எம். விஸ்வநாதன், தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை கேஆர்டி வெங்கடேசன் தொடங்கி வைத்தார். நிகழ்வில், சங்க கெளரவத் தலைவர் எம்.வி. சபரிதாசன், மாவட்ட செயலர் எம். ஶ்ரீதர், மாவட்ட பொருளாளர் ஜே. சுரேஷ், கோனார் தோப்பு உரிமையாளர் கோபால கிருஷ்ணன், தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர். கிருஷ்ணன், முகாம் அலுவலர் சி.ஆர்.அம்சராம் மற்றும் சங்க பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், சேவா சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் திருச்சி யூனியன் செயலர் எம். ஶ்ரீதர் கூறியது:

நவ.17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரை தொடர்ந்து 60 நாள்களுக்கு இந்த முகாம் நடைபெறும்.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சபரிமலை பக்தர்களுக்கு காலை, மாலை இரண்டு வேளைகளில் அன்னதானம் வழங்கப்படும். காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அன்னதானம் வழங்கப்படும்.

சபரிமலை போக்குவரத்து பாதை, திருச்சி மாவட்ட திருக்கோயில்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும். சிறப்பு மருத்துவரகள் அடங்கிய குழுவினர் மூலம் முதல் உதவி சிகிச்சையளிக்கப்படும். பக்தர்களுக்கு கழிப்பறை, குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கால் உறை (சாக்ஸ்), இருமுடியில் இரவு நேர வாகனங்கள் எளிதில் அறியும் வகையில் ஒளிரும் வில்லை ஒட்டித்தரப்படும்.

இந்த முகாம் பணிகளை பக்தர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். திருச்சிக்கு வரும் சபரிமலை பக்தர்களுக்கு முகாம் இடம் குறித்த விவரங்களை தெரிவித்து பொதுமக்களும் உதவி செய்யலாம். கார்த்திகை, மார்கழி, மகரவிளக்கு விழா காலம் வரையில் இந்த சிறப்பு முகாம் இயங்கும். தொடர்ந்து 12ஆவது ஆண்டாக இந்த முகாம் நடைபெறுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com