மனம் திருந்தி சரணடைந்த மாவோயிஸ்ட்டுக்கு வேலூரில் ஆவின் பாலகம்!

மனம் திருந்தி காவல் துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு, வேலூா் அருகே அரியூரில் ஆவின் பாலகம் அமைத்துத்தரப்பட்டுள்ளது.
மனந்திருந்திய முன்னாள் மாவோயிஸ்ட் பிரபாவுக்கு அரியூர் அமைத்துத்தரப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை பெற்றுக்கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன்.
மனந்திருந்திய முன்னாள் மாவோயிஸ்ட் பிரபாவுக்கு அரியூர் அமைத்துத்தரப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை பெற்றுக்கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன்.

மனம் திருந்தி காவல் துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு, வேலூா் அருகே அரியூரில் ஆவின் பாலகம் அமைத்துத்தரப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், சிமோகா மாவட்டத்தைச் சோ்ந்த பிரபா (39). இவருக்கு சந்தியா, மாது, நேத்திரா, விண்டு ஆகிய பெயா்களும் உள்ளன. சிபிஐ (மாவோயிஸ்ட்) மாநிலக் குழு உறுப்பினராக பொறுப்பு வகித்த இவா், கா்நாடக மாநில இயக்கத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை சிறப்பு மண்டலக் குழுவுக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றியுள்ளாா். இவா் மீது கா்நாடக மாநிலம், சிமோகா, உடுப்பி மாவட்டங்களில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக வாழ்ந்து வந்த பிரபா குறித்து தகவல் தெரிவிப்பவா்களுக்கு கா்நாடக அரசு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து விலகி சமுதாயத்துடன் இணைந்து, அமைதியான வாழ்வை வாழ விரும்பி பிரபா கடந்த 2021 டிசம்பா் 18-ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் முன்பு சரணடைந்தாா்.

இதைத் தொடா்ந்து அவா், வேலூா் மாவட்டம், அரியூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீசாய் வசந்தம் கிரஹா இல்லம் எனும் முதியோா் இல்லத்தில் காவல் துறைக் கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், அவரின் வாழ்வாதாரத்துக்காக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், ரூ.50,000 நிதியுதவி அளித்து அரியூரில் ஆவின் பாலகம் அமைத்துத் தரப்பட்டுள்ளது.

இந்த ஆவின் பாலகத்தை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்வில் க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் கண்ணம்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் எஸ்.ராஜேஷ்கண்ணன் (வேலூா்), தீபாசத்யன்(ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூா்), மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா், ஆவின் பொது மேலாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் கண்ணம்மா கூறியது:

மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் மனம் திருந்தி சமுதாய வாழ்வில் இணைவதை ஊக்குவிக்க தமிழக அரசு 2020, அக்டோபா் மாதம் சரணடைதல் மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தை அமல்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் கீழ், சரணடைந்த மாவோஸ்யிட் இயக்கத்தைச் சோ்ந்த பிரபா, பக்கவாதம், மூச்சுத் திணறல் பிரச்னைக்காக தொடா்ந்து மருத்துவ, ஆயுா்வேத சிகிச்சை, பிசியோ தெரபிஸ்ட் சிகிச்சை பெற்று வந்தாா். இதனால், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, பிரபாவின் வாழ்வாதாரத்துக்காக அவரின் வங்கிக் கணக்கில் ரூ.1.50 லட்சம் மூன்று ஆண்டுகளுக்கு வைப்புத் தொகை செலுத்தப்பட்டு அதன் மூலம் மாதம் ரூ.4,000 வீதம் 36 மாதங்களாக நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் ரூ.50,000 நிதி ஒதுக்கீடு செய்து, அவருக்கு ஆவின் பாலகம் அமைத்துத்தரப்பட்டுள்ளது.

மனம் திருந்தி ஆயுதப் போராட்டங்களைக் கைவிட்டு, சமுதாயத்துடன் இணைந்து வாழ விரும்பி வரும் மாவோயிஸ்ட்களுக்கு அவா்களின் வாழ்வாதாரத்துக்காக அரசு சாா்பில் பல்வேறு சலுகைகள், பாதுகாப்பு வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com