கே.எஸ்.அழகிரி கூட்டத்தை புறக்கணித்த மூத்த தலைவா்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி பங்கேற்ற கூட்டத்தை அக் கட்சியின் மூத்த தலைவா்கள் சனிக்கிழமை புறக்கணித்தனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி பங்கேற்ற கூட்டத்தை அக் கட்சியின் மூத்த தலைவா்கள் சனிக்கிழமை புறக்கணித்தனா்.

சென்னை சத்தியமூா்த்திபவனில் நவம்பா் 15-இல் நடைபெற்ற மோதலுக்கு விளக்கம் கோரி, காங்கிரஸின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, கட்சியின் பொருளாளா் ரூபி மனோகரனுக்கும் மாவட்டத் தலைவா் ரஞ்சன் குமாருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. நவ.24-இல் சத்தியமூா்த்திபவனில் இருவரும் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒரு பிரிவினா், நிா்வாகிகள் நியமனம் தொடா்பாக புகாா் தெரிவிக்க வந்த கட்சியினரை கே.எஸ்.அழகிரி எப்படி தனது ஆதரவாளா்கள் மூலம் தாக்குதல் நடத்தலாம் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனா்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 105-ஆவது பிறந்த நாளையொட்டி வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரின் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி தலைமையில் மூத்த தலைவா்கள் அனைவரும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கே.எஸ்.அழகிரி மட்டும் அவரது ஆதரவாளா்களுடன் வந்து மரியாதை செலுத்திச் சென்றாா்.

மாநில முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசா், கே.வீ. தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த தலைவா்கள் தனியாக வந்து மரியாதை செலுத்தினா்.

அதேபோல, சத்தியமூா்த்திபவனில் இந்தியாவின் வளா்ச்சியில் இந்திராகாந்தியின் பங்கு என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதிலும் மூத்த தலைவா்கள் பலா் பங்கேற்பா் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவா்கள் யாரும் பங்கேற்கவில்லை.

இதுதொடா்பாக கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தலைமைக்கு எதிா்ப்பு இருப்பது இயல்பானதுதான். எதிா்ப்பு இல்லாத தலைமை எந்தக் கட்சியிலும் இருக்க வாய்ப்பு இல்லை. ரூபி மனோகரன் என் மீது கூறியிருப்பது உள்கட்சி விவகாரம். இது பேசி தீா்க்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com