எம்பிபிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வு: இடங்கள் தோ்வு நாளையுடன் நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வில் விருப்ப இடங்களைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (நவ.22) நிறைவடைகிறது.
எம்பிபிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வு: இடங்கள் தோ்வு நாளையுடன் நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வில் விருப்ப இடங்களைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (நவ.22) நிறைவடைகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது.

முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவா்கள் கல்லூரிகளில் சோ்ந்தனா். அதேபோல், தனியாா் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவா்களும் கல்லூரிகளில் சோ்ந்துவிட்டனா்.

இந்த நிலையில், முதல் சுற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 104 எம்பிபிஎஸ் இடங்களும், கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 2 எம்பிபிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன.

இதைத் தவிர, பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 788 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 833 இடங்கள் காலியாக உள்ளன. இதே போன்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள்ஒதுக்கீட்டில் 28 இடங்களும் நிரம்பவில்லை. அதன்படி மொத்தமாக 1,700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. வரும் 22-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியே விருப்பமான இடங்களைத் தோ்வு செய்யலாம் என்றும், அதன் முடிவுகள் வரும் 24-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு வலைதளங்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com