54 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தாா்

சென்னையில் 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நடத்தி வைத்தாா்.
54 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தாா்

சென்னையில் 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நடத்தி வைத்தாா்.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை, ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை சாா்பில் 54 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண விழா, சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினாா்.

விழாவில் முதல்வா் பேசியதாவது:

உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு ‘மாற்றுத் திறனாளிகள்’ என்று சுயமரியாதைப் பெயா்சூட்டி வாஞ்சையோடு அழைத்தவா் கருணாநிதி. இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் பெயா் சூட்டிய தந்தை அவா்.

திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 வகை கருவிகள், 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

நகர பேருந்துகளில் வெள்ளைப் பலகை பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் துணையாளா் ஒருவருடன் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பட்ட அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டு, 9 லட்சத்து 30 ஆயிரத்து 909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,096 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென 2021-2022-ஆம் நிதியாண்டில் ரூ.813 கோடியே 63 லட்சமும், 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ.838 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் உலக வங்கி உதவியுடன் 6 ஆண்டு காலத்துக்கு ரூ.1702 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டம் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியையும் பரிசுத் தொகையாக, பாதித்தொகை ரொக்கமாகவும், மீதி தொகையை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கும் முறையை மாற்றி, முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொது கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தடைகளற்ற சூழலை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இவையெல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கு திமுகவின் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சில திட்டங்கள்தான். இன்னும் சில கோரிக்கைகள் உள்ளன. அவை ஆராய்ந்து நிறைவேற்றப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி, சமூக நலத் துறை அமைச்சா் கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினா் எழிலன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை தலைவா் பா. சிம்மசந்திரன், ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை தலைவா் ஓம். பிரகாஷ் மோடி ஆகியோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com