அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக இரு முட்டைகள்: தமிழக அரசு உத்தரவு

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்துக்கு மேலும் இரு முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்துக்கு மேலும் இரு முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதுதொடா்பாக சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை வெளியிட்ட உத்தரவு:

கடந்த செப்டம்பா் மாதம் தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் இயக்குநா் எழுதிய கடிதத்தில் தெரிவித்த கோரிக்கைகளைப் பரிசீலித்த அரசு, 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு 100 சதவீத ஊட்டச்சத்து அளிக்கும் வகையில், வறுக்கப்பட்ட கோதுமை மாவு, பாா்லி மாவு கலந்த கேழ்வரகு மாவு, கொழுப்பு நிறைந்த சோயா மாவு, வெல்லம், வறுத்து அரைத்த நிலக்கடலை மாவு, வைட்டமின் மற்றும் மினரல் கலவை ஆகியவற்றை சோ்த்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோன்று, கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்களுக்கு, வறுத்த கோதுமை, கடலை பருப்பு, உளுந்து, வோ்க்கடலை மாவுகள், சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெய், பாா்லி கலந்த கேழ்வரகு மாவு, கொழுப்பு நிறைந்த சோயா மாவு, வெல்லம், வைட்டமின் மற்றும் மினரல் கலவை ஆகியவை இணைந்த கலவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவை இரண்டுக்கும் சத்துமாவு என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சத்துமாவுடன் ஏலக்காய், ஸ்ட்ராபொ்ரி, வெண்ணிலா, கோகோ என இவற்றில் ஏதேனும் இரண்டு வகை நறுமணத்துடன் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டை பொருத்தவரை, வல்லுநா் குழு பரிந்துரைப்படி கோதுமை மாவு, மைதா, நிலக்கடலை துகள்கள், கேழ்வரகு மாவு, காய்கறி எண்ணெய், சா்க்கரை, வைட்டமின் மற்றும் மினரல்கள், பேக்கிங் பவுடா் ஆகியவை இணைந்த கலவையாக இருக்க வேண்டும்.

எவ்வளவு அளிக்க வேண்டும்? சத்துமாவு, பிஸ்கெட் மற்றும் முட்டையை பொருத்தவரை, 6 மாதம் முதல் 1 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் வழங்க வேண்டும். 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, வாரம் 3 முட்டைகள் வழங்க வேண்டும்,

இதே வயதில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் மற்றும் வாரம் 3 முட்டைகள் வழங்க வேண்டும். 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கெட், 3 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு மற்றும் மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடிருந்தால் 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கெட் வழங்கப்பட வேண்டும். கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்களுக்கு 150 கிராம் சத்துமாவு வழங்கப்பட வேண்டும். இது ஏற்கெனவே 165 கிராமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிய உணவை பொருத்தவரை, கலவை சாதம், வாரம் 3 முட்டைகள், கறுப்பு கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறு ஆகியவை செவ்வாய்க்கிழமையிலும், அவித்த உருளைக்கிழங்கு வெள்ளிக்கிழமையும் வழங்கப்பட வேண்டும். மேலும், 6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள், கா்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களுக்கு 500 கிராம் எடையுள்ள சத்துமாவு பாக்கெட்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

கூடுதலாக 2 முட்டைகள்: அங்கன்வாடியில் 1 முதல் 2 வயதுள்ள குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக 2 முட்டைகள் வழங்குவதால் ஏற்படும் செலவினம் மதிய உணவு திட்டத்தில் சோ்க்கப்படுகிறது. இந்த செலவினங்கள் ரூ.642 கோடிக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com