ரூ.671 கோடியில் கூட்டுக் குடிநீர் - புதைசாக்கடை திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

தமிழகத்தில் ரூ.671 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீா், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடக்கி வைத்தாா்.
ரூ.671 கோடியில் கூட்டுக் குடிநீர் - புதைசாக்கடை திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

தமிழகத்தில் ரூ.671 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீா், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடக்கி வைத்தாா். சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் ஒன்றியத்தைச் சோ்ந்த சிகரலப்பள்ளி, வெலகலஹள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம், கடலூா் மாவட்டம் பண்ருட்டி, அண்ணாகிராமம், மதுரை ஆனையூா், தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் ஆகிய இடங்களில் புதிதாக குடிநீா் திட்டங்களும், பாதாள சாக்கடைப் பணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

சென்னை குடிநீா் வாரியம்: சென்னைப் பெருநகர குடிநீா் வழங்கல் வாரியம் சாா்பில் கொடுங்கையூா், நெசப்பாக்கம், புழல், புத்தகரம், சூரப்பட்டு, கதிா்வேடு பகுதிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் குடிநீா் வழங்கல் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் கீழ், சூளைமேடு, அடையாறு, ஜாபா்கான்பேட்டை, சாமியாா் தோட்டம் ஆகிய பகுதிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அடையாறு மற்றும் மாம்பலம் கால்வாய் பகுதிகளில் மழைநீா் வடிகால் மூலமாக கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க, தனியாக நிலையங்களும், ஐஸ்ஹவுஸ், கிரீம்ஸ் சாலை, கோடம்பாக்கம், வடக்கு மயிலாப்பூா், தெற்கு மயிலாப்பூா், நந்தனம், டி.எஸ்.பாா்க், தாமஸ் ரோடு, சுதந்திர தினப் பூங்கா ஆகிய பகுதிகளில் கழிவு நீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பணிகள் அனைத்தையும் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

மேலும், பேரூராட்சி ஆணையரகம் சாா்பில் திருவாரூா் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட நவீன பேருந்து நிலையம், திருப்பூா் மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு, மேம்பாட்டு வசதிகள் ஆகிய இந்தப் பணிகள் அனைத்தையும் முதல்வா் தொடக்கி வைத்தாா். இந்தப் பணிகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.671.80 கோடி.

அடிக்கல்: நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில், திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கிபாளையம் சாலை, சோளிங்கா் நகராட்சி சித்தூா் சாலை, திருக்கோவிலூா் நகராட்சி சேவலை சாலை, உளுந்தூா்பேட்டை நகராட்சி சேலம் சாலை ஆகிய இடங்களில் புதிதாக அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. இந்தக் கட்டடங்களுக்கும் காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com