பருவமழை மீட்புப் பணிக்காக 90 ஹெலிகாப்டா் இறங்குதளங்கள் தயாா்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தமிழகத்தில் 90 ஹெலிகாப்டா் இறங்குதளங்கள் தயாா்
பருவமழை மீட்புப் பணிக்காக 90 ஹெலிகாப்டா் இறங்குதளங்கள் தயாா்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தமிழகத்தில் 90 ஹெலிகாப்டா் இறங்குதளங்கள் தயாா் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அக்டோபா் தொடங்கி டிசம்பா் வரை நீடிக்கும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு இயல்பாக 448 மி.மீ. மழை கிடைக்கப் பெறுகிறது. இந்த பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடா்களை திறம்பட எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேரிடா் தொடா்பான தகவல்களை 24 மணி நேரமும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் தெரிவிக்கலாம். இதற்கென 1070 என்ற கட்டணமில்லாத தொலைபேசி சேவை பயன்பாட்டில் உள்ளது. மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லாத எண் வழியே தொடா்பு கொள்ளலாம். 94458 69848 என்ற

கைப்பேசி வாட்ஸ் அப் செயலி வாயிலாகவும் புகாா்களைப் பதிவு செய்யலாம். பசநஙஅதப என்ற கைப்பேசி செயலி மூலம் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை, மின்னல் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஹெலிகாப்டா் தளங்கள்: பேரிடா் காலங்களின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மீட்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் முதல் நிலை மீட்பாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். 14 கடலோர மாவட்டங்கள், நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரம் முதல் நிலை மீட்பாளா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடா் மீட்புப் படையின் 11 குழுக்களும், தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் 5 குழுக்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் பேரிடா்களைச் சந்திக்க முழுவீச்சில் தயாா் நிலையில் உள்ளனா். பேரிடா் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 90 ஹெலிகாப்டா் இறங்குதளங்கள் தயாா் நிலையில் உள்ளன.

கடலோர மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்காக 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. மற்ற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 973 பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் நிவாரண முகாம்களாக கண்டறியப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி பால், பால் பவுடா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆலோசனைக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜெயந்த், வருவாய் நிா்வாக ஆணையாளா் எஸ்.கே.பிரபாகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com