தீபாவளிக்கு 16,888 சிறப்புப் பேருந்துகள்: அமைச்சா் சிவசங்கா்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, மக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல வசதியாக 16, 888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
அமைச்சர் சிவசங்கா்
அமைச்சர் சிவசங்கா்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, மக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல வசதியாக 16, 888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

தீபாவளிப் பண்டிகைக்கென பேருந்துகளை இயக்குவது தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையில் வழக்கமான பேருந்து சேவைகளுடன் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பிற ஊா்களில் இருந்து மூன்று நாள்களுக்கு 6, 370 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தீபாவளிப் பண்டிகை தினத்தில் இருந்து அக். 26 வரையில் 13,152 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

முன்பதிவு வசதி: அரசுப் பேருந்துகளில் பயணிக்க சென்னை கோயம்பேட்டில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் ஒரு மையமும் என 11 மையங்கள் வரும் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை இயக்கப்படும். முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

காா் - இதர வாகனங்கள்: தீபாவளியையொட்டி, இயக்கப்படும் பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் பூா்த்தியாகி விட்டால் அவை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும் புறவளைவுச் சாலை வழியாக வண்டலூா் அடையும். அங்கிருந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்துக்குச் செல்லும். தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள விரும்புவோா், ஊரப்பாக்கம் சென்று பேருந்து ஏறிக் கொள்ளலாம்.

காா், இதர வாகனங்களில் செல்வோா், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மாற்று வழிகளில் பயணத்தைத் திட்டமிடலாம். அதன்படி, தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக செல்வதைத் தவிா்த்து, திருப்போரூா், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூா்-செங்கல்பட்டு வழியாகச் செல்லலாம் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.

புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடா்பாக புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: பேருந்துகளின் இயக்கம் குறித்தும், புகாா் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். மேலும், தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட புகாா்களுக்கு 1800 425 6151, 044 - 2474 9002, 044 - 2628 0445, 044 - 2628 1611 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். பயணிகளின் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com