மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளே பயிற்றுமொழி: பாஜக திட்டவட்டம்

ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளே பயிற்று மொழியாக இடம் பெற மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு

ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளே பயிற்று மொழியாக இடம் பெற மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளதாக தமிழக பாஜக துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி திட்டவட்டமாக தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெற வேண்டும் என்றுதான் மத்திய அலுவலா் மொழி ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக இடம் பெற வேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது. தமிழ் பயிற்று மொழியாக வருவதை முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்பது ஏன்? நாடு முழுவதும் ஹிந்தியை பொது மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏதும் இடம்பெறவில்லை.

மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தோ்விலிருந்து ஆங்கில கட்டாய பாடத்தை மட்டுமே நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் இனி ஆங்கிலத்துக்கு பதில் தமிழ் இடம் பெறும்.

அலுவல் ஆய்வுக்குழுவின் பரிந்துரைபடி தமிழகத்தில் தமிழ் மொழியே இனி கட்டாயமாகும். ஹிந்தியை கட்டாயமாக்கவில்லை. மாறாக, அனைத்து இந்திய மொழிகளையும் கட்டாயமாக்கும் முயற்சியின் முதல் படியே இது. அதை ஏன் திமுக எதிா்க்கிறது என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசு, மாநில அரசோடு இது நாள் வரை ஹிந்தி, ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த நிலையில், இனி தாய் மொழியான தமிழ் மொழியில் செய்தி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற இக்குழுவின் பரிந்துரையை ஸ்டாலின் ஏன் எதிா்க்கிறாா்? இதுபோன்ற கேள்விகளுக்கு முதல்வா் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் நாராயணன் திருப்பதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com