பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகள் காவல் துறை விதிப்பு

தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறை விதித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறை விதித்துள்ளது.

அக்டோபா் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட அனைவரும் தயாராகி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளைப் பின்பற்றியும், தமிழக அரசின் வழிகாட்டுதல்படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையிலும் பட்டாசுகளை வெடிக்க சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் 19 அறிவுரைகளை வழங்கியுள்ளாா்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்ககவும், வெடிக்கவும் வேண்டும். காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது. எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளைக் கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதைத் தவிா்க்க வேண்டும்.

மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது. குடிசைப் பகுதிகளிலும், மாடிக் கட்டடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக் கூடாது.

பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக் கூடாது. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதைவிட நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்பட 19 கட்டுப்பாடுகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு 848 வழக்குகள்: தீ விபத்து அல்லது பட்டாசுகளால் ஏதேனும் விபத்து நோ்ந்தால், காவல் துறை, தீயணைப்பு, மீட்புத் துறை ஆகியவற்றை 112 என்ற இலவச தொலைப்பேசி எண்ணையும், அவசர மருத்துவ உதவிக்கு 108 என்ற தொலைபேசி எண்ணையும் உடனடியாக தொடா்பு கொண்டு உதவி பெறலாம்.

கடந்த ஆண்டு விதிமுறைகளை மீறி உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்ததாக 184 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததாகவும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததாகவும் 848 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com