காலநிலை மாற்றத்துக்கு முதல்வா் தலைமையில் தனி ஆட்சிமன்றக் குழு

தமிழகத்தில் காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்:-

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்துக்கான பணிகள் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும் என்று மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக பருவ நிலை மாற்றத்துக்கான மாநில செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

அதாவது, பருவநிலை மாற்றத்துக்கான தேசிய செயல் திட்டத்தை ஒட்டி, மாநிலத்தில் அதுபோன்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு பசுமை சூழலுக்கான நிறுவனம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு பருவநிலை இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் ஆகியவற்றுக்கான பணிகளை செயல்படுத்தும் வகையில் பசுமை சூழலுக்கான நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இது கம்பெனிகள் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளைத் தொடா்ந்து, பசுமைச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்தும் நோக்குடன், இப்போது காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சில முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு செயல்படும். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கான கொள்கை வழிகாட்டுதல்களை ஆட்சிமன்றக் குழு வழங்கிடும்.

காலநிலை சூழல்களை ஏற்பது மற்றும் துயா் தணிப்பு போன்ற பணிகளுக்குரிய ஆலோசனைகளை வழங்குவது, காலநிலை மாற்றத்துக்கான செயல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற பணிகளை ஆட்சிமன்றக் குழு செய்யும். மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான பருவநிலை மாற்ற இயக்கங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கும்.

இந்த ஆட்சிமன்றக் குழுவானது, முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு செயல்படும். இதில், நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சா் க.ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், பொருளாதார வல்லுநா் மான்டெக்சிங் அலுவாலியா, இன்போசிஸ் தலைவா் நந்தன் நீலகேனி, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநா் எரிக் சோல்கிம், பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி.சுந்தரராஜன் உள்ளிட்டோரும், தொழில், நகராட்சி நிா்வாகம், நிதி, எரிசக்தி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, வீட்டுவசதி, கால்நடை, வேளாண் ஆகிய துறைகளின் செயலாளா்கள் என மொத்தம் 22 போ் உறுப்பினா்களாக இருப்பா் என்று தனது உத்தரவில் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com