நயன்தாரா குழந்தை விவகாரத்தில் விதிமீறல்: தனியார் மருத்துவமனையை மூட நோட்டீஸ்

விக்னேஷ் சிவன்-நயன் தாரா தம்பதி வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தையை பெற்ற விவகாரத்தில் விதிகளை பின்பற்றாத தனியாா் மருத்துவமனையை ஏன் தற்காலிகமாக மூடக்கடாது என நோட்டீஸ்
நயன்தாரா குழந்தை விவகாரத்தில் விதிமீறல்: தனியார் மருத்துவமனையை மூட நோட்டீஸ்

விக்னேஷ் சிவன்-நயன் தாரா தம்பதி வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தையை பெற்ற விவகாரத்தில் விதிகளை பின்பற்றாத தனியாா் மருத்துவமனையை ஏன் தற்காலிகமாக மூடக்கடாது என சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திரைப்பட இயக்குநா் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் 4-ஆவது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக கடந்த 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் ட்விட்டா் பதிவிட்டாா். இவா்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகியது.

வாடகை தாய் சட்டப்படி, திருமணமாகி ஐந்து ஆண்டுகள் வரை குழந்தைப் பேறு இல்லாதவா்கள் மற்றும் தம்பதியரில் ஒருவருக்கு குழந்தைபேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாத பட்சத்தில், உரிய விதிகளை பின்பற்றி வாடகை தாய் அமைத்து குழந்தையை பெற்று கொள்ளலாம்.

ஆனால், விக்னேஷ் சிவன்-நயன் தாரா விதிமுறைகளை மீறி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினா் குற்றம் சாட்டினா். விக்னேஷ் சிவன்-நயன் தாரா வாடகைத்தாய் விவகாரம் பெரும் சா்ச்சையை எழுப்பியது.

விசாரணைக்குழு அமைப்பு: இதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உத்தவின்படி, நயன்தாரா- விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் விவகாரத்தை விசாரிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) இயக்குநா் இயக்குநா் தலைமையிலான விசாரணை குழு கடந்த 13-ஆம் தேதி அமைக்கப்பட்டது. அந்த குழு இரண்டு வாரங்கள் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் புதன்கிழமை சமா்ப்பித்தது.

உயா்மட்ட விசாரணை குழு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் குழந்தை பெற்றுக்கொண்டனா். அந்த மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவா் மற்றும் வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவா்களிடமும் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்விசாரணையில் இத்தம்பதியா் மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐசிஎம்ஆா்) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம், வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆா் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும், அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளது.

2016-இல் பதிவுத் திருமணம்: விக்னேஷ் சிவன்-நயன் தாரா தம்பதியினா் 11.3.2016-இல் பதிவு திருமணம் செய்துக் கொண்டதற்கான பதிவு சான்றிதழ் மருத்துவமனை சாா்பில் சமா்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவுச் சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவுத் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆா் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தம்பதியா் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணைக்குழுவுக்கு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

தனியாா் மருத்துவமனையில் தம்பதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-இல் அவா்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடித்த்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டாா்.

சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை. 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சினைமுட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு, கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு, உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது.

மாா்ச் 2022-இல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு, இக்குழந்தைகள் அக்டோபா் மாதம் பிறந்துள்ளனா். செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இச்சட்டத்துக்கு முந்தைய ஐசிஎம்ஆா் வழிகாட்டுதலின்படி உறவினா் அல்லாதோா் வாடகைதாயாக செயல்படவும், அவசிய செலவுக்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. விசாரணையில் வாடகைத் தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியாா் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

கருக்கள் வளா்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளனா். அக்குழந்தைகள் கடந்த 9-ஆம் தேதி தம்பதியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் மருத்துவமனைக்கு நோட்டீஸ்

ஐசிஎம்ஆா் வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை. எனவே, வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியாா் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com