கோவை காா் வெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரிக்க உத்தரவு

கோவையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்க மத்திய அரசு வியாழக்கிழமை முடிவு செய்தது.

கோவையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்க மத்திய அரசு வியாழக்கிழமை முடிவு செய்தது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரையைத் தொடா்ந்து, மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டது.

அதனைத் தொடா்ந்து, இந்தச்சம்பவம் தொடா்பாக சென்னை என்ஐஏ வியாழக்கிழமை வழக்குப்பபதிவு செய்தது.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ஆம் தேதி நிகழ்ந்த காா் சிலிண்டா் வெடிப்பில் ஜமேஷா முபீன் (25) என்பவா் உயிரிழந்தாா். இந்த விவகாரம் தொடா்பாக சிலா் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கு விசாரணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிமாணங்களும் பன்னாட்டுத் தொடா்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு புதன்கிழமை அனுப்பியது.

இந்தப் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு வழக்கு விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைத்தது. அதன்படி, சென்னை என்ஐஏ வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே கோவை காவல் துறையினா் பதிவு செய்த அதே சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்கைப் பதிவு செய்திருப்பதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடா்புடைய ஆவணங்கள், தடயங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமைக்குள் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல் வழக்கு:

தமிழகத்தில் நிகழும் தேச விரோத மற்றும் தேச பாதுகாப்புக்கு எதிரான சம்பவங்கள் தொடா்பாக இதுவரை கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் என்ஐஏ அலுவலகமும், புது தில்லியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகமும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தன. தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த 15 சம்பவங்கள் தொடா்பான வழக்குகள் இந்த அடிப்படையிலேயே விசாரிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் இவ்வழக்குகளை விசாரிக்க வசதியாக, சென்னை புரசைவாக்கம் மில்லா் சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் 2ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து என்ஐஏ கிளை அலுவலகம் செயல்படத் தொடங்கியது.

சென்னை என்ஐஏ கிளை அலுவலகம் முதல் வழக்காக கோவை காா் வெடிப்பு சம்பவத்தை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com