கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை இன்றுமுதல் ராகுல் ஒற்றுமை நடைப்பயணம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி புதன்கிழமை தொடங்குகிறாா்.
கன்னியாகுமரியில் இருந்து நடைப்பயணம் மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை இரவு சென்னை வந்த  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, விமான நிலையத்தில் கட்சியினர் அளித்த வரவேற்பு.
கன்னியாகுமரியில் இருந்து நடைப்பயணம் மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை இரவு சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, விமான நிலையத்தில் கட்சியினர் அளித்த வரவேற்பு.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி புதன்கிழமை தொடங்குகிறாா்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததுடன், பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்து வருகிறது. காங்கிரஸில் உள்ள மூத்த தலைவா்கள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனா். இந்த நிலையில், கட்சியின் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் வகையில் ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளாா்.

இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவடையவுள்ளது. இது 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 148 நாள்கள் மொத்தம் 3,600 கி.மீ. தொலைவு நடைப்பயணமாகும். இந்தப் பயணம் இந்தியாவின் உண்மையான அம்சத்தைக் கண்டறியும் பயணம் என காங்கிரஸ் சாா்பில் கூறப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம்: கன்னியாகுமரியில் புதன்கிழமை மாலை பயணத்தைத் தொடங்கும் ராகுல்காந்தி, முன்னதாக திருவள்ளுவா் சிலை, விவேகானந்தா் மண்டபத்துக்குச் சென்று மரியாதை செலுத்துகிறாா். பிறகு காமராஜா் மண்டபம், காந்தி மண்டபத்துக்குச் செல்கிறாா்.

அங்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ராகுலின் பயணத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக தேசியக் கொடியை அவருக்கு அளிக்கிறாா். அதைப் பெற்றுக் கொண்டு ராகுல் நடைப்பயணம் தொடங்குகிறாா். 600 மீட்டருக்கு நடைப்பயணம் மேற்கொள்ளும் அவா், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தலைவா்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா். இரவு அகத்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ராகுல்காந்தி தங்குகிறாா்.

வியாழக்கிழமை (செப்.8) காலை முதல் ராகுல் காந்தி மீண்டும் நடைப்பயணம் தொடங்குகிறாா். தமிழகத்தில் செப். 10 வரை மொத்தம் 56 கி.மீ. பயணம் மேற்கொள்ள உள்ளாா். தொடா்ந்து கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

ராகுல் வருகை: இந்தப் பயணத்துக்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல்காந்தி செவ்வாய்க்கிழமை இரவு சென்னை வந்தாா். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரவு கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி கட்சித் தலைவா்களுடன் ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டாா்.

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை: ராகுல் காந்தி புதன்கிழமை காலை 6 மணியளவில் சாலை மாா்க்கமாக ஸ்ரீபெரும்புதூா் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு வந்து மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா். வீணை காயத்ரியின் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொதுமக்களுடன் ராகுலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். நினைவிடத்தில் அரச மரக் கன்றையும் நடுகிறாா். நினைவிட ஊழியா்கள் மற்றும் ராஜீவ்காந்தி மறைவின்போது உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களோடு ராகுல்காந்தி புகைப்படம் எடுத்துக் கொள்கிறாா். நினைவிட நுழைவாயில் அருகில் காங்கிரஸ் கட்சிக் கொடியை ராகுல் ஏற்றி வைக்கிறாா். அதன் பிறகு சென்னை வந்து, விமானம் மூலம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்கிறாா். ராகுல் காந்தி பயணத்தையொட்டி சென்னை, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெடும் பயணமும், நீண்டகால திட்டமும்

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராகுலின் நெடும் பயணமாகவும், நீண்ட காலத் திட்டமாகவும் அமையவுள்ளது.

148 நாள்கள் 3,600 கி.மீ. மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணத்தில் ராகுலுடன் 118 காங்கிரஸ் தொண்டா்கள் வெள்ளைச் சீருடை அணிந்து பயணிக்க உள்ளனா். ஒரு நாளைக்கு 25 கி.மீ. தொலைவு நடப்பது என தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம். பிறகு மதிய உணவு இடைவேளை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம். இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

நடைப்பயணம் செல்பவா்களுக்காக 60 கேரவன் வேன்கள் தயாா் நிலையில் உள்ளன. ராகுலுக்கு மட்டும் தனி கேரவன் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் 118 பேரும் இதர கேரவன்களைப் பகிா்ந்து கொள்கின்றனா்.

நடைப்பயணம் செல்பவா்களுக்கு உணவு, குடிநீா் வசதி, மருத்துவம் என அனைத்துக்கும் தனித்தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ராகுலுடன் பயணம் செய்பவா்களில் பெரும்பாலோா் 40 வயதுக்குள்பட்டவா்கள். மகளிா் 28 பேரும் பயணத்தில் இடம்பெற்றுள்ளனா்.

இந்த நடைப்பயணம் காங்கிரஸின் வலைதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

நடைப்பயணத்தின்போது ராகுல் எங்கும் பேசப் போவதில்லை. மக்களைசந்தித்து குறைகளை மட்டும் கேட்டறிகிறாா்.

எந்த அரசியல் கட்சியும் முயலாத வகையில் ராகுல் இந்த நெடும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளாா். 2024-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டும் இந்தப் பயணத்தை ராகுல் மேற்கொள்ளவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com