முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் 9 மணி நேரமாக அதிரடி சோதனை!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் 9 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் 9 மணி நேரமாக அதிரடி சோதனை!

விராலிமலை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் 9 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் இவர் அதிமுக அமைச்சரவையில் 8 ஆண்டு காலமாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நிலையில், அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஊழல்கள்,  முறைகேடுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. 

குறிப்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு இவர் அமைச்சராக இருந்தபோது, இவரது வீடு உள்ளிட்ட இவருக்கு சம்பந்தமான பல்வேறு இடங்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரூ.89 கோடி  பணப்பட்டுவாடா, குட்கா முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் சோதனை செய்தனர்.

அதன் பின்னர் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 2021 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி 2016 முதல் 21 வரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமானத்தை விட அதிகமாக 27 கோடி ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் என பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரது வீடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக சோதனை செய்தனர். 

இந்த சோதனையில் ரூ.23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் சான்றுகள், 19 ஹார்ட்டிஸ்க் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கரோனாவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தது.

அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா மஞ்சக்ரனை கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும் இந்த மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முறைகேடாக தகுதி சான்றிதழை 2020-ம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வழங்கி உள்ளதாக கிடைக்கப்பெற்ற ஆவணத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் தமிழக முழுவதும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம்.விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான அருகே உள்ள இரண்டு வீடுகளில் காலை 6 மணி முதல் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையை அடுத்து விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விஜயபாஸ்கரின் இல்லம் முன்பு குவிந்துள்ளனர்.

இதனையடுத்து 30-க்கு மேற்பட்ட காவல் துறையினர் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.‌ இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.‌ 9 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வரக்கூடிய நிலையில், சோதனையில் முடிவிலேயே இது போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் இந்த கல்லூரிக்கு மட்டுமே முறைகேடாக சான்று வழங்கினாரா? அல்லது வேறு ஏதும் கல்லூரிகளுக்கு இது போன்று சான்றிதழ்களை முறைகேடாக வழங்கினாரா? என்பது தெரியவரும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதால் அந்த பகுதியே பரபரப்பான சூழல் நிலவு வருகிறது.

இந்நிலையில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிற்கு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி பேசுகையில்:

வெள்ளைச் சட்டை போட்டாலே இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க தான் வேண்டும் என்றும்,  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வரப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் வீட்டில் எந்தவித ஆவணங்களும் இதுவரை எடுக்கவில்லை என்றும், தன்னிடம் எந்த வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் முறைகேடாக சான்றிதழ் வழங்கியதன் அடிப்படையில் தான் சோதனை நடைபெறுகிறதே என்று கேட்டதற்கு, அமைச்சராக இருந்த போது விஜயபாஸ்கர் பல்வேறு சான்றிதழ்களை வழங்கி இருப்பார். அது எதற்காக என்று தெரியவில்லை என்றும், குற்றச்சாட்டுகள் பிரதமர் மீதும் உள்ளது. ஸ்டாலின் மீதும் உள்ளது. நீதிமன்றம் தான் குற்றம் செய்தார்களா, இல்லையா என்று உறுதி செய்யும் என்று விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி திறந்தவெளி பேட்டியாக தெரிவித்தார்.


இந்நிலையில் வீட்டின் முன்பு குவிந்துள்ள விஜயபாஸ்கரன் ஆதரவாளர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக தமிழக அரசு இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை நடத்தி வருவதாகவும் தொடர்ந்து பலமுறை விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் இதுபோன்ற செயல்கள் ஈடுபடும் தமிழக அரசையும் லஞ்ச ஒழிப்பு துறையையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com