குவைத்தில் கொலை செய்யப்பட்டவரின் உடலை கேட்டு கூத்தாநல்லூரில் பேரணி

கூத்தாநல்லூர் வட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன், குவைத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு நீதியும், அவரது உடலையும் கேட்டு, கூத்தாநல்லூர் நகர் வாசிகள் சார்பில் பேரணி நடைபெற்றது.
குவைத்தில் கொலை செய்யப்பட்டவரின் உடலை கேட்டு கூத்தாநல்லூரில் பேரணி

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன், குவைத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு நீதியும், அவரது உடலையும் கேட்டு, கூத்தாநல்லூர் நகர் வாசிகள் சார்பில் பேரணி நடைபெற்றது.

லெட்சுமாங்குடி - கொரடாச்சேரி பிரதான சாலையைச் சேர்ந்த, ராசப்பா என்பவரின் ஒரே மகன் முத்துக்குமரன் (37). இவர், லெட்சுமாங்குடியில் காய்கறி கடை வைத்திருந்தார். இந்நிலையில், ஏஜென்ட் மூலம், சூப்பர் மார்க்கெட் வேலைக்கு என குவைத் நாட்டிற்குச் சென்றுள்ளார். கடந்த 3 ஆம் தேதி குவைத் புறப்பட்ட முத்துக்குமரன், 4-ஆம் தேதி, சூப்பர் மார்க்கெட்டில் வேலை கொடுக்காமல், குவைத் பாலைவனத்தில், ஒட்டகம் மேய்க்க விட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில், ஊரில் தனது மனைவி வித்யா மற்றும் தாய், தந்தையாரிடம் சொல்லியுள்ளார். இதற்கிடையில், ஒட்டகம் மேய்க்க விட்ட குவைத்க்காரரிடம், சொன்ன வேலையைக் கொடுக்காமல், இப்படி பாலைவனத்தில் விட்டுள்ளீர்களே, இந்த வேலை எனக்கு வேண்டாம் என சொல்லியுள்ளார். அதை அவர்கள் கேட்கவில்லை. மாறாக, முத்துக்குமரனை அடித்து, துன்புறுத்தியுள்ளனர். முத்துக்குமரனிடமிருந்து எந்தவித தகவலும் வராததால், மனைவி மற்றும் வீட்டில் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், குவைத்திலிருந்து வெளிவரும் அல்ராய் பத்திரிகை மற்றும் நண்பர்கள் மூலமாக, முத்துக்குமரனை அடித்து, கொடுமைப்படுத்தியும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்ற செய்தியைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற முத்துக்குமரன் படுகொலை செய்யப்பட்டதற்கு நியாயமான நீதியும், உரிய நிதியும் கேட்டு, கூத்தாநல்லூரில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச் சங்கத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் சார்பில், கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பேரணி நடைபெற்றது. லெட்சுமாங்குடி முத்துக்குமரன் வீட்டிலிருந்து புறப்பட்ட பேரணிக்கு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் சங்கத்தின் செயல் தலைவர் அய். உஸ்மான் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.வி.கண்ணன், பா.ஜ.க. நகரத் தலைவர் பிரபாகரன், வர்த்தகச் சங்கத் தலைவர் கு.ரவிச்சந்திரன், சி.பி.அய். நகரச் செயலாளர் ப.முருகேசு, திமுக மாவட்ட முன்னாள் பிரதிநிதி, டீ.குமரேசன், அதிமுக நகரப் பொருளாளர் ஜெ.சுவாமிநாதன், தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர், கல்வியாளர் திமுஜீத்தீன், தேமுதிக ஒன்றியச் செயலாளர் திருமுருகன்,நகர மன்ற துணைத் தலைவர் மு.சுதர்ஸன் உள்ளிட்டோரின் முன்னிலையில்  ஏராளமானவர்கள் பேரணியாகப் புறப்பட்டனர்.

பேரணி, லெட்சுமாங்குடி பாலம், திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை, ஏ.ஆர். சாலை வழியாக, வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு, வட்டாட்சியர் சோமசுந்தரத்திடம், முத்துக்குமரனின் கொலைக்கு நீதி கேட்டு, மனைவி வித்யா மனுவை வழங்கினார். முத்துக்குமரன் சார்பில், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச்சங்க பொதுச் செயலாளர் கே.வி.கண்ணன் வழங்கிய மனுவில் கூறியுள்ளது.

கணவரின் மறைவிற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். கணவரின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும். இங்கு அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்ய வேண்டும். மேலும், முத்துக்குமரனின் குடும்பத்திற்கு, ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். முத்துக்குமரனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேரணி ஏற்பாடுகளை, நகர மன்ற உறுப்பினர் முருகேசன், சமூக ஆர்வலர் ஐயப்பன் மற்றும் ஊர் பிரமுகர்கள் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com